Saturday 16 March 2013

DAILY HOLY SLOKAS





சிவதூதி

இந்த நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப&நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்குமுன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. புஷ்கரம் என்ற க்ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு சிவதூதிஎன்று பெயர். எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூர்ய ஒளிபோல் மின்னுகிறது. நவரத்னங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். எல்லாவிதமான மங்களங்களையும் அன்பர்களுக்கு அளிப்பவள்.

மந்திரம்:

ஓம் சிவதூத்யை வித்மஹே
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ சப்தமி, கிருஷ்ண பக்ஷ நவமி.

வழிபடு பலன்கள்:
நமக்கு எதிரான அநீதியும் அதர்மமும் அழியும். நியாயமான கோரிக்கை எதுவும் எளிதில் நிறைவேறும். எந்த ஆபத்தும் நெருங்காது.





த்வரிதா

இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் த்வரிதாஎன்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் சூடியுள்ளாள். கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும் நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் பொலிகிறாள். சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியைத் துணை கொள்வார்க்கு அணிமாதி ஸித்திகளும் ஞானமும் கைகூடும்.

மந்திரம்:

ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ அஷ்டமி, கிருஷ்ண பக்ஷ அஷ்டமி.

வழிபடு பலன்கள்:
எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்.





குலஸுந்தரி

குலஸுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள்  துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, ஜபமாலை, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள். தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் இவளைச் சுற்றியிருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும் அசுரர்களும்கூட இந்த அன்னையின் அருளை வேண்டி  நிற்கின்றனர்.

மந்திரம்:
ஓம் குலஸுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ நவமி, கிருஷ்ண பக்ஷ ஸப்தமி.

வழிபடு பலன்கள்:
இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்.




நித்யா

அழிவில்லாதவள். கால நித்யா ரூபமானவள். சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தையுடையவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஸ்தகம், ஜபமாலை, புஷ்பபாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள். கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சௌந்தர்ய ரூபவதியான இவள் அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழும் பச்சைப் பசுங்கிளி.

மந்திரம்:

ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ தசமி, கிருஷ்ண பக்ஷ சஷ்டி.

வழிபடு பலன்கள்:
அனைத்துத் தொல்லைகளும் தானே விலகும். தடைகள் தவிடு பொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் வந்தடையும். தீர்க்கமான உடல் நலமும், அஷ்டமா சித்திகளும் கிட்டும்.




நீலபதாகா

நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகங்களும் ஒவ்வொரு முகத்திலும் முக்கண்களும் கொண்டவள். இவள் பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி அபய, வரதம் தரித்தவள். சிகப்புப் பட்டாடை அணிந்து, முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்னங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்துள்ளாள். இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். நல்லோர்களைக் காத்து, தீயோர்களை அழிக்கும் பேரரசி இவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள் திருவருட் பார்வையினால் ஒரு நொடிப்போதில் மேன்மை கைகூடும்.

மந்திரம்:

ஓம் நீலபதாகாயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ ஏகாதசி, கிருஷ்ண பக்ஷ பஞ்சமி.

வழிபடு பலன்கள்:
எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை.





விஜயா

இந்த அன்னை அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகங்கள், பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும் நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். பலவகையான அணிகலன்களும் அழகுக்கு அழகு செய்கின்றன. திருக்கரங்களில் சங்கு, சக்ரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம்கனி, அல்லி மலரை ஏந்தி வலதுகாலை மடித்து இடதுகாலைத் தொங்கவிட்டு, பாதத்தைத் தாமரை மலரில் இருத்திய தோற்றத்துடன் பொலிகிறாள். சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்துள்ள எண்ணற்ற சக்திகள் இவளைச் சுற்றிலும் எப்போதும் இருப்பர். ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் விளங்குகிறாள்.

மந்திரம்:

ஓம் விஜயா தேவ்யை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ துவாதசி, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி.

வழிபடு பலன்கள்:
எந்தவகை வழக்குகளிலும் வெற்றி. கலைகளில் தேர்ச்சி.





ஸர்வமங்களா

இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்னங்களும் இழைக்கப்பட்ட வைடூர்ய மகுடம் துலங்கப் பொலிகிறாள். இந்த நித்யா தேவியின்  கடைக்கண் பார்வை அனவரதமும், அன்பரைக் காக்கின்றது. தன் நான்கு கரங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்துள்ளாள். சிவப்புப் பட்டுடுத்தி ஸர்வாலங்கார பூஷிதையாய் தோற்றம் அளிக்கிறாள். இந்த நித்யா தேவியைச் சுற்றிலும் எழுபத்திரண்டு சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன.

மந்திரம்:

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே
சந்த்ராத்மிகாயை திமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ திரயோதசி, கிருஷ்ண பக்ஷ த்ரிதியை.

வழிபடு பலன்கள்:
பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்.







"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment