Saturday, 16 November 2013

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்

 

கார்த்திகை விழா குறித்து புராணங்கள் பல்வித காரணங்களைச் சொன்னாலும் மூன்று காரணங்கள் முக்கியமாக போற்றப் பெறுகின்றன.

01. மலையாய் அமர்ந்த மகாதேவன். அடி - முடிகாண முடியா வண்ணம் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் காட்சித்தந்து அவர்கள் அறியாமையை நீக்கி சிவபொருமான் நெருப்பு ஜோதியாய் காட்சித் தந்து அண்ணாமலையாக அருள்பாலித்த திருநாள் திருக்கார்த்திகை திருநாள் ஆகும்.

02. தீப்பொறியாய் உதித்த சரவணன். ஈசனின் ஆறுமுகங்களிலிருந்து தீப்பொறியாய் உதித்த சண்முகக்கடவுளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள்.

அவர்களுக்குரிய கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை கார்த்திகேயனாக வழிபட நற்பேறுகள் யாவும் கிடைக்கும் என்பது முருகப்பெருமான் தந்தருளிய வரம்.

அதன்படி இந்நாள் கார்த்திகேயக் கடவுளுக்குரிய நாளாகவும் போற்றப்பெறுகிறது.

03. தீபமாக நின்ற திருமால் ஒருமுறை கலைவாணிக்கு தெரியாமல் பிரம்மன் யாகம் ஒன்று நடத்தினான்.

இதனால் சினந்த சரஸ்வதி யாகத்தை அழிக்க மாய நலன் என்ற அசுரனை ஏவினாள்.

அவன் யாகத்தை தடுக்கும் பொருட்டு உலகம் முழுமையும் இருட்டாக்கினான். உடன் பிரம்மன் திருமாலை வேண்டி நிற்க, பகவான் ஜோதியாய் ஒளிர்ந்து இருளை விரட்டி யாகத்தை காத்தருளினார். இப்படி ஜோதியாய் தோன்றிய விஷ்ணுவை தீப உருவில் வணங்குவர் வைணவர்கள்.

திருக்கார்த்திகையன்று குறிப்பிட்ட நியதிகளோடு, தீபங்கள் ஏற்றி கார்த்திகை தெய்வங்களை வழிபடுவதால் நம் வாழ்விலும் துன்ப இருளகன்று இன்பவொளி பிறக்கும்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 
10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் முதல் நாள கொடியேற்றத்துடன் விழா தொடங்கும்.   இந்நாளில் அருணாச்சலேஸ்வரர் வெள்ளி வாகனத்தில் ஊர்வலமாக காலையிலும் மாலையிலும்   பஞ்ச மூர்த்திகளான கணபதி, முருகன், சண்டீஸ்வரர், அருணாச்சலேஸ்வரர், மற்றும் பார்வதியை ஊர்வலம் எடுத்து செல்வது நடைமுறையில் உள்ளது. இங்குள்ள கல்யாண மண்டபத்தில் ஆராதனை முடிந்தவுடன் வெவ்வேறு  
வாகனத்தில்   பஞ்சமூர்த்திகள் எடுத்துச்செல்லப்படுகிறார்கள். 

பத்தாம் நாள் கார்த்திகை தீப திருவிழாவின் அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கி கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை ஆறு மணியளவில் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். இத்தீபம் அருணாச்சலேஸ்வரரின் உருவத்தை குறிப்பதால் உலகம் எங்கும் உள்ள பக்தர்கள் இக்காட்சியை காண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

கீடாஹா: பதங்காஹா: மசகாச்ச: வ்ருக்ஷாஹா :
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவாஹா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ராஹா:!!

‘புழுக்களோ பக்ஷிகளோ அல்லது ஒரு கொசுவஹத்தான் இருக்கட்டும். அந்தக் கொசுவோ நம் மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும் பூமியிலும் எத்தனை தினுசான ஜீவா ராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ,

மனுஷ்யர்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராமணனோ பஞ்சமனோ எவனானாலும் சரி எதுவானாலும் சரி இந்த தீபத்தை பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாபங்களும் நிவ்ருதியாகி இன்னொரு ஜன்ம எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்’ என்று இந்த ஸ்லோகத்திற்கு அர்த்தம்

திருவண்ணாமலை தீபத்தைமுன்னிட்டு

திருநாவுக்கரசர் திருவண்ணாமலையில் பாடிய பதிகம்.

நான்காம் திருமுறை. பதிகம் 63. திருவண்ணாமலை : திருநேரிசை

திருச்சிற்றம்பலம்:

ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்தோட் சுடர்மழுப் படையி னானே
தியே அமரர் கோவே அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவிலேனே. 1

பண்தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே யமரர் கோவே அணியணா மலையு ளானே
தொண்டனே னுன்னை யல்லாற் சொல்லுமா சொல்லி லேனே.2

உருவமு முயிரு மாகி ஓதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொலியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லால் மற்றொரு மாடி லேனே. 3

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும் அணியணா மலையு ளானே. 4

பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா
அறைகழ லமர ரேத்து மணியணா மலையு ளானே
இறைவனே யுன்னை யல்லா லியாதுநான் நினைவி லேனே. 5

புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த வண்ணா மலையுளா யலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய் பாதநான் மறப்பி லேனே. 6

இரவியு மதியும் விண்ணு மிருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவன மெட்டுந் திசையளி யுருவ மானாய்
அரவுமிழ் மணிகொள் சோதி யணியணா மலையு ளானே
பரவுநின் பாத மல்லாற் பரமநான் பற்றி லேனே. 7

பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை யீந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்
ர்த்துவந் தீண்டு கொண்ட லணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத் திறமலால் திறமி லேனே. 8

பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்
லுநீர் கொண்டல் பூக மணியணா மலையு ளானே
வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே. 9

இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த வெம்மான்
உரத்தினால் வரையை யூக்க வொருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த வண்ணா மலையுளா யமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே. 10


திருவண்ணாமலை தீபத்தைமுன்னிட்டு, அருணகிரிநாத சுவாமிகள்
திருவண்ணாமலையில் பாடிய திருப்புகழ்.

கடல்பரவு தரங்க மீதெழு திங்களாலே
கருதிமிக மடந்தை மார்சொல்வ தந்தியாலே
வடவனலை முனிந்து வீசிய தென்றலாலே
வயலருணையில் வஞ்சி போதந லங்கலாமோ

இடமுமையை மணந்த நாதரி றைஞ்சும்வீரா
எழுகிரிகள் பிளந்து வீழஎ றிந்தவேலா
அடலசுரர் கலங்கி யோடமு னிந்தகோவே
அரிபிரம புரந்த ராதியர் தம்பிரானே.


தீப தரிசனத் தத்துவமாக ஒரு பாடலை சிறீ அருணாசல ஸ்துதிபஞ்சகம் எனும்
நூலில் காணநேர்ந்தது. அப்பாடல்,

இத்தனுவே நான் ம் எனும் மதியை நீத்து அப்
புத்தி இதயத்தே பொருந்தி அகநோக்கால்
அத்துவிதமாம் மெய் அகச்சுடர் காண்கை பூ
மத்தி எனும் அண்ணாமலைச் சுடர் காண் மெய்யே.


 


அருணாச்சலேஸ்வரர் கோயில் :

 

 

அண்ணாமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த உலக புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். தென் இந்தியாவை ஆண்ட பல மன்னர்களில் குறிப்பாக பாண்டிய மன்னர், சோழ மன்னர், மற்றும் மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகியோர் இக்கோயிலின் வளர்ச்சிக்காக பல வழிகளில் உதவிபுரிந்துள்ளனர். அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரியும் தெய்வங்கள் சிவன் மற்றும் பார்வதிதேவி. இங்கு சிவன் உலகை உருவாக்கிய பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.திருவண்ணாமலையில் உள்ள சிவன் பக்தர்களால் அண்ணாமலையார் என்றும் அருணாச்சலேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் உலகளவில் மிகப்பெரிய கோயிலென பெயர்பெற்றது. இக்கோயிலை பற்றி பல விபரங்கள் தமிழ் புராண புத்தகங்களான தேவாரம் மற்றும் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலின் மகிமையை போற்றி தமிழ் கவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் சிறப்பாக பாடியுள்ளனர்.திருவண்ணாமலை மேலும் ஒரு சிறந்த பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது.

அக்காலகட்டத்தில் ஆண்ட பல மன்னர்கள் அருணாசலேஸ்வரர் கோயிலின் வளர்ச்சிக்கும் வசதியடையவும் மிகுந்த பொருளுதவி, பராமரிப்பு ஆகியவை அளித்து இக்கோயில் பிரபலமடைய செய்துள்ளனர். பல பக்தர்களும் பொதுமக்களும் திருவண்ணாமலை வளர்ச்சியடைய உறுதுணையாக இருந்துள்ளனர். இக்காரணத்தால் கடந்த ஆயிரம் ஆண்டு காலமாக இக்கோயிலின் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது

 இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் 66 அடி உயரம் கொண்ட கோவிலின் கோபுரம். இது பதிமூன்று அடுக்குகளை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏழு பிரகாரங்கள் மற்றும் ஒன்பது அழகான கோபுரங்கள் உள்ளன. பதினைந்தாம்  நூற்றாண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட இக்கோபுரம் உயரத்தில் இரண்டாவது கோபுரமாக விளங்குகிறது. கிழக்குப்புறம் உள்ள கோபுரம் ராஜகோபுரம் என அழைக்கப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோயில் 25 ஏக்கர்  நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஏழு பிரகாரத்தில் முதல் இரண்டு பிரகாரங்கள் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. மற்ற ஐந்து பிரகாரங்கள் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.இக்கோயிலில் இரண்டு தெப்பகுளங்கள் உள்ளது. இவை பிரம்ம தீர்த்தம் என்று சிவாகங்கா தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு ஓர் பிரம்மாண்டமான ஆயிரம் தூண்கள் கொண்ட அழகான மண்டபம் உள்ளது. இவை அக்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டப்பட்டது.குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் ஆட்சி புரிந்த ஹோசாலா மன்னர்களால் இங்கு இருக்கும் சில சன்னதிகள் மற்றும் பிரகாரங்கள் கட்டப்பட்டது.

இங்கு அக்னி வடிவத்தில் உள்ள சிவன் வழிபாடு ஓவ்வொரு கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாள் அன்று மலையின் உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை தரிசிக்க ஆயிரக்கணகில் பக்தர்கள் இங்கு கூடுவது பல்லாண்டு காலமாக நடந்து வரும் பழக்கமாகும். இந்நாள் மிக விசேஷமான நாளாககார்த்திகை தீபத்திருநாள்என்று அழைக்கப்படுகிறது. இதை காண உலகமெங்கும் உள்ள சிவனடியார் பக்தர்கள் இங்கு கூடி தீபத்தை தரிசிப்பது மிகவும் புண்ணியமான காரியம் என்பது மக்களிடையே நிலவும் ஆழ்ந்த நம்பிக்கை.இங்கு லிங்க வடிவத்தில் உள்ள சிவன் அண்ணாமலை என்ற நாமம் பெற்றும் பார்வதிதேவி அபிட்டகுசலாம்பாள் என்ற பெயர் பெற்றும் விளங்குகின்றனர். இக்கோயில் சிவனுடைய சிறப்பான கோயில் என விளங்குவதற்கு காரணம் இங்கு சிவன் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் வடிவத்தில் காட்சி தருவதால் சிறப்புபெற்றது. மற்ற நான்கு பூதங்களான ஆகாயம், நீர், வாயு, மற்றும் நிலம் சேர்ந்து அமைந்தது தான் இவ்வுலகம். இந்த நான்கு பூதங்களும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள வெவேறு கோயில்களில் சிவனை பிரதிபலிகின்றன. சிவன் திருவானைகாவலில் நீர் வடிவத்திலும் சிதம்பரத்தில் ஆகாய வடிவத்திலும் காஞ்சிபுரத்தில் நிலம் வடிவத்திலும் ஆந்திர மாநிலம் காளகஸ்தி கோயிலில் வாயு வடிவத்திலும் காட்சியளிக்கிறார்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்றும் பாரம்பரிய முறையில் பூஜை மற்றும் வழிபாடுகள் நடைமுறையில் இருந்துவருகிறது. இங்கு வாழும் மக்கள் மற்றும் கோயிலுக்கு சம்மந்தமான பூசாரி நிர்வாகிகள், தர்மகர்த்தாக்கள், சிப்பந்திகள், காவலாளிகள், பஜனை குழுவினர், பல்லக்கு தூக்குபவர்கள், வித்வான்கள், மற்றும் இதர கைவினை கலைஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அணைத்து கோயில் வேளைகளில் ஈடுபட்டு சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்து சரிவர செய்து வருகின்றனர்.குறிப்பாக தெற்குப்புரத்தில் உள்ள தெப்பகுளத்தில் இருக்கும் கங்கா தீர்த்தத்தை யானையின் மீது வைத்து தெற்கு புரத்தில் திருமஞ்சன கோபுரம்வழியில் கொண்டுவந்து இந்நீரை இரண்டாவது பிரகார நுழைவாயிலை சுத்தம் செய்வதற்கு உபயோகிக்கப்படுகிறது.பின்பு சிவன் மற்றும் பர்வதிதேவியை ஊர்வலமாக சிவனை ராஜகோபுரம் உள்ள கோயிலுக்கும் பார்வதியை உண்ணாமலையம்மன் கோயிலுக்கும் எடுத்துச்செல்கிறார்கள். அதன் பின் பூஜைகள் ஆரம்பித்து காலையில் தொடங்கி ஒரு நாள் முழுவதும் ஆறு முறை நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் சிவனை சேவித்து பௌர்ணமி அன்று மாதம் ஒரு முறை கிரிவலம் வருகின்றனர். சுமார் 5 லட்சம் பக்தர்கள் மாதம் ஒருமுறை பௌர்ணமி நாள் அன்று 13 கி.மீ நடந்து கிரியை சுற்றி வருவது வாழக்கமாக உள்ளது. இக்கிரிவலம் செல்பவர்கள் அனைவரும் மனதில் அமைதியுடனும், உடல் வலிமையுடனும் இருக்க உதவுகிறது

 

திருவண்ணாமலை வரலாறு :

திருவண்ணாமலை ஒரு வரலாறு முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னிவடிவதில் காட்சியளிக்கிறார். திருவண்ணாமலை கோயிலை பற்றி பல கவிகள் கவி இயற்றி பாடியுள்ளனர். இது ஒரு பாடல்பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் பிரகாரங்களில் உள்ள கற்களில் பல முக்கிய குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்துக்கள் பல நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிக்கின்றன. மேலும் இக்கோயில் மற்றும் ஸ்தலத்தை பற்றிய விவரங்கள் இங்கு கிடைத்த செம்பு தட்டுகளால் [ செப்பு தகடுகளால் ] கிடைக்கப்பெற்றது.

திருவண்ணாமலையின்
புகழை மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஆகியவர்கள் அவர்கள் இயற்றிய கவிகள் முலம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர். தமிழ் இலக்கியங்களான தேவாரம் மற்றும் திருவாசகம் இதனை வெளிக்காட்டுகிறது. அருணாச்சலேஸ்வரரை பற்றியும் திருவண்ணாமலையை பற்றியும் அருணகிரிநாதர் அவர்கள் எழுத்துகள் முலம் சிறப்பாக உரைத்துள்ளார். இப்படைப்புகளை வாசித்த சோழ மன்னர்கள் மிகவும் பூரிப்படைந்து இக்கோயிலுக்காக பல உதவிகளை செய்துள்ளனர். மேலும் கடவுள் அருணாச்சலேஸ்வரர் மகிமை மீது மிகுந்த நம்பிக்கை அடைந்துள்ளனர். சோழ மன்னர்கள் பல கோபுரங்கள், மண்டபங்கள், கோயிலை சேர்ந்த கட்டிடங்கள் கட்டிகொடுத்து கடந்த ஆயிரம் காலமாக கோயில் முன்னேற்றம் அடைய உதவியுள்ளனர்.

மேலும்
விஜய நகரை ஆண்ட மன்னர் கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலை கோயில் வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள் என பல கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார். இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியால் உருவாக்கப்பட்டது. இவர் அண்ணாமலையாரின் தீவிர பக்தராக விளங்கினார். இக்கோபுரமானது இந்தியாவின் உயரத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இக்கோயில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட மிக பெரிய கோயில் என்று வரலாறு கூறுகிறது. மற்றும் ஒரு சிவன் பக்தரான  பல்லாலா இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார். இவர் செய்த உதவியை சிவனடியார் பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறு கூறுகிறது.

சிவனடியார்
இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம். ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில், சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும், பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர். இந்த போட்டியில் பிரம்மா ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை. இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோயிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது. இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆதலால் இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது

 

கிரிவலம் :

திருவண்ணாமலையில்  ஓவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறது. லட்ச கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர். கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது. ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெற்று உடல் முழு உற்சாகமும் பெரும் என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை. தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது என நம்பபடுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், என்று அழைக்கப்படுகிறது.இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது. சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள். இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.

கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.

கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையிறல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிருவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank GodDo all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment