Tuesday 1 March 2016

மஹா சிவராத்திரி - 07.03.2016 - திங்கட் கிழமை

மஹா சிவராத்திரி - 07.03.2016 - திங்கட் கிழமை
சைவத்தின் பெருவிழாவாக, சிவ பெருமானுக்காக கொண்டாடப்படுவது சிவராத்திரி.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி சிவபெருமானுக்கு சிறப்புடையது. அன்றைய தினம் சிவராத்திரி என அனைவராலும் கொண்டாடப்படுகிற நாளாகும்.
சிவராத்திரியின் சிறப்புகள்:வில்வித்தையில் ஈடு இணையற்றவனான அர்ஜூனன் தவம் செய்து பாசுபதம் (பசுபதி என்பது சிவனுக்குரிய பெயர் - பசுபதி அளித்ததால் அது பாசுபதம்) அஸ்திரத்தை பெற்றதும்,
கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்திலிருந்து ரத்தம் வடிவதைக் கண்டு தன் கண்ணை பெயர்த்தெடுத்து வைத்து முக்தி அடைந்ததும்,
பகீரதன் மிகக் கடும் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்ததும்,
தன் மீது அளவிலா பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேயனுக்காக எமதர்மனையே சிவ பெருமான் சம்ஹாரம் செய்ததும்,
பார்வதி தேவி தவமிருந்து சிவனுக்கு இடப் புறம் இடம் பெற்று சிவனையே உமையொரு பாகனாகச் செய்ததும் இந்த புண்ணிய நாளில் நிகழ்ந்தது என்று சிவ மஹா புராணம் கூறுகின்றது.
பூஜைகள்:சிவராத்திரியன்று சிவத் தலங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
ஒரு வில்வ இலை கொண்டு சிவனுக்கு பூஜை செய்வது கோடிக்கணக்கான மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும்.
அன்று சாப்பிடாது விரதம் இருந்து கண் விழித்து சிவன் தோத்திரங்களை சொல்வது மிகவும் சிறந்தது.
தான தர்மங்கள் செய்வது, தெய்வத் திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வது, பல வகையான நோன்புகள் மேற்கொள்வது, விரதங்கள் இருப்பது போன்றவற்றால் ஏற்படும் நற்பலன்கள், புண்ணியங்கள் சிவனை சிவன் ராத்திரியன்று வழிபடுவதால் ஏற்படும் புண்ணியத்திற்கு நிகராகாது என வேதங்களும், புராணங்களும் கூறுகின்றன.
சிவராத்திரி இருவகைப்படும். ஒன்று மாத சிவராத்திரி. மற்றது மகா சிவராத்திரியாகும்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து (அனுஷ்டித்து) வருகின்றனர்.
மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி" ஆகும்.
வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.
மகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.
முதல் கால பூஜைஇந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாவது கால பூஜை
இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.
மூன்றாவது கால பூஜைஇந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும்.
இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.
இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதைலிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காவது கால பூஜைஇந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.
மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!
சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும்சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.
விரத முறை :விரதம் அனுஷ்டிப்போர் முதல் ஒருநாள் ஒருபொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் இருந்து, காலை ஸ்நானம் செய்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து இரவு நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்.
அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாயலங்களில் நடைபெறும் நான்கு கால அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
புராண விளக்கம் 1 :ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அதை அனுஷ்டிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்றும் பிரார்த்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார்.
அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றனர்.
புராண விளக்கம் 2 :மற்றொரு கல்பத்தின் முடிவில் இன்னொரு பிரளயம் வந்தது. பிரபஞ்சம் நீரில் மூழ்கியது. திருமால் வராக உருவெடுத்தார். அவ்வராகம் நீரில் புகுந்து பிரபஞ்சத்தையெடுத்து வெளிக்கொணர்ந்து நிறுத்தியது. திருமால் செருக்கோடு தம் இடம் சென்றார். அதுவரை உறங்கிக்கிடந்த பிரமனும் விழித்தார். படைப்புத் தொழில் தொடங்கியது. அகந்தையால் பிரமன் தாமே கடவுள் என்றார். திருமால் தாமே கடவுள் என்றார். சர்ச்சை நீண்டது. அச்சமயத்தில் அவ்விருவருக்கும் நடுவில் ஓர் அக்கினிப்பிழம்பாய் அடிமுடி அயறியப்படாதவாறு கீழுமேலுமாய் நீண்டு நின்றார் சிவபெருமான். பிரமன் அன்னமும், விஷ்ணு வராகமுமாய் அப்பிழம்பின் அடிமுடியைக் காணச் சென்றனர். ஆதியும் அந்தமும் காணமுடியவில்லை. இருவரும் அகந்தை நீங்கி அப்பெருமானைத் துதித்தனர். அப்பெருமான் பிழம்பு வடிவான லிங்கத்திலிருந்து மகேசுரமூர்த்தியாய் வெளிப்பட்டார். அவ்வெளிப்பாட்டிற்கு லிங்கோத்பவரென்று பெயர். பிரம விஷ்ணுக்கள் அவரிடம் திருவருள் பெற்றுச் சென்றனர்.
இச்சரித்திரத்தை,
'யத் பாதாம்போருஹத்வம்த்வம் ம்ருக்யதே விஷ்ணுநா ஸஹ
ஸ்துத்வா ஸ்துத்யம் மஹேசாந மவாங்மநஸகோசரம்
பக்த்யாநம்ர தநோர் விஷ்ணோ: ப்ரஸாத மகரோத்விபு:"
(சிவபெருமான் முடியைத் தேடப்போன பிரம்மாவோடு கூட விஷ்ணுவினால் அவரது இரு திருவடித் தாமரையும் தேடப்படுகின்றன; வாக்கு மனசுக் கெட்டாத சிவபெருமானை துதித்துப் பக்தியினால் வணங்கினவராகிய விஷ்ணுக்குச் சிவபெருமான் அருள்பாலித்தார்) என வேத(சரப)மும் எடுத்துரைக்கிறது. இச்சம்பவமும் இரவில் நடந்தது. ஆகையால் அவ்விரவு சிவராத்திரி எனப்பட்டது.
'ச்யதி துக்காதிகமிதி சிவா' சிவ என்பதற்குத் துக்கங்களை அழிக்கின்றது என்று பொருள். 'ராதி சுகமிதி ராத்ரி' ராத்திரி என்பதற்குச் சுகத்தைச் செய்கின்றது என்று பொருள். ஆதலால் சிவராத்திரி என்பது துக்கங்களைப் போக்கிச் பக்தியைக் கொடுப்பது என்று பொருள்படும்.
திரயோதசி உமா ஸ்வரூபம். சதுர்த்தசி ஸ்வரூபம். அவ்விரண்டு திதியுங்கூடிய இரவு சிவலிங்க ஸ்வரூபம்.
புராண விளக்கம் 3:
ஒரு சமயம், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, மேரு மலையையே மத்தாகக் கொண்டு ஒரு புறம் அசுரர்களும், மறு புறம் தேவர்களும் நின்று பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்துதான், மஹா லக்ஷ்மியும், காமதேனு, குபேர சம்பத்துக்களும் கிடைத்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை எடுத்துக்கொண்டார்கள். இறுதியாக ஆலகால விஷம் தோன்றியது. அண்டசராசரங்களையும் அழிக்கும் வல்லமை வாய்ந்தது. அனைவருக்கும் அனுக்ரஹிக்கும் சிவபெருமான் அந்த விஷத்தை எடுத்துக்கொண்டார். விஷத்தை அருந்தினார். பயந்த பார்வதி சிவனின் தொண்டையோடு அந்த விஷத்தை நிறுத்தினார். விஷம் ஏறியவர்கள் உறங்கக் கூடாது என்பது வைத்ய விதி. அதற்கேற்ப அண்டசராசரங்கள் அனைத்தும் சிவபெருமானை இரவு முழுதும் சிவபெருமானைப் போற்றின. அந்த இரவு தான் சிவராத்திரி. சிவன் உலகைக் காத்த இரவு என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது சிவராத்திரி.
மற்றுமொரு புராண விளக்கம் :காட்டில் இரவில் மாட்டிக்கொண்ட ஒருவன் மிருகங்களுக்கு பயந்து, ஒரு மரத்தின் மேலேறி, பயத்தால் அம்மரத்தின் ஒவ்வொரு இலைகளையும் கீழே போட்டுக்கொண்டிருந்தான். அவனை சிவகணங்கள் வந்து வணங்கி வேண்டும் வரங்களை வழங்கின.
சிவகணங்கள் வந்த காரணமென்ன எனில், அவன் ஏறியது வில்வ மரம். வில்வ மரத்தின் கீழே சிவலிங்கம் இருந்தது. அந்த சிவலிங்கத்திற்குத் தான் வில்வ இலைகளை எறிந்திருக்கின்றான். சிவகணங்கள் சிவனுக்கு அர்ச்சனை செய்கின்றான் என எண்ணி அருள் பாலித்திருக்கின்றன.
அவன் இரவு முழுவதும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்திருக்கின்றான். அந்த இரவுதான் சிவராத்திரி என்றும் சில புராணங்கள் கூறும்.
எந்த ஒரு இறை சிந்தனையும் இல்லாமல், வெறும் வில்வ இலைகளை மட்டுமே அர்ச்சனை செய்ததாலேயே ஒருவனுக்கு சிவ அனுக்ரஹம் கிடைத்தது என்றால், சிவ சிந்தனையோடு, சிவனுக்கு உரிய பொருட்களை சிவலிங்கத்திற்கு பக்தி சிரத்தையோடு செய்தோமாகில் சிவ கடாட்சம் மிக நிச்சயம் கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
விரதமிருந்து பேறு பெற்றவர்கள் :சிவராத்திரி தலை சிறந்த சிவவிரதம்.
பிரமன் சிருஷ்டித் தொழிலையும்,
மஹாவிஷ்ணு காக்கும் தொழிலையும், லக்ஷ்மியையும், சக்ராயுதத்தையும்,
இந்திரன் விண்ணுலக அதிபதி பட்டத்தையும்,
குபேரன் அளவற்ற நிதியையும்,
குமரன் அழகான மேனியையும்,
கன்மாடபாதனென்னும் வேந்தன் பிரமகத்தி நீக்கத்தையும் பெற்றனர்.
**************************************************************** 
- நி.த. நடராஜ தீக்ஷிதர்

DAILY HOLY SLOKAS - MARCH 2016