ஆரோக்கியம் தரும் தன்வந்திரி ஜெயந்தி , தன திரயோதசி
|
திருமகள் அருள் சேர்க்கும் தன திரயோதசி...
தீபாவளிப் பண்டிகை வந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாள்
மட்டும்,நரகசதுர்த்தசி தினமாகக் கொண்டாடப்படும் இது, வடநாட்டில் ஐந்து நாள்
பண்டிகை!!!. தனதிரயோதசி துவங்கிக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை,
நரகசதுர்த்தசி, லக்ஷ்மி பூஜை, பலிபிரதிமா, பாய்தூஜ்(யமதுவிதியை) அன்று
நிறைவுறுகிறது.
கோவத்ஸ் துவாதசி துவங்கி, பண்டிகைகள் கொண்டாடுவதும் உண்டு..இன்றைய தினம் கோவத்ஸ துவாதசி..
கோவத்ஸ துவாதசி விரதம் பற்றிய செய்திகளுக்கு, என் பதிவொன்றின் சுட்டி தருகிறேன். இது சென்ற வருடம் பதிவிட்டது..
கோவத்ஸ துவாதசி விரதம்
கோவத்ஸ் துவாதசி துவங்கி, பண்டிகைகள் கொண்டாடுவதும் உண்டு..இன்றைய தினம் கோவத்ஸ துவாதசி..
கோவத்ஸ துவாதசி விரதம் பற்றிய செய்திகளுக்கு, என் பதிவொன்றின் சுட்டி தருகிறேன். இது சென்ற வருடம் பதிவிட்டது..
கோவத்ஸ துவாதசி விரதம்
பொருட்செல்வம் உலக வாழ்வுக்கு இன்றியமையாதது. திருமகளின் கருணை நிரம்பிய
பார்வை அனைத்து செல்வங்களையும் தர வல்லது. இப்பதிவில் தனதிரயோதசி குறித்த
செய்திகளையும், திருமகளின் அருள் சேர்க்கும் எளிய முறை பூஜையையும் காணலாம்.
திருமகள் அருள், மன்னுயிர்கள் வாழ்வில் நலமெல்லாம் பெருக, பொங்கிப்
பிரவகிக்கும் தினம் தன திரயோதசி . இன்றைய தினம் 'அக்ஷய திருதியை'
தினத்திற்குச் சமமாகப் போற்றப்படுகின்றது.
ஸ்ரீலக்ஷ்மி பூஜை, தன்வந்திரி பூஜை, யமதீபம், கோத்ரிராத்ரி விரதம் என
திரயோதசி தினத்தன்று கொண்டாடப்படும் பண்டிகைகள் அணிவகுக்கின்றன.
தனமாகிய செல்வத்துக்கு அதிபதியாம் லக்ஷ்மி தேவியைப் பூஜிக்க உகந்த தினம் தன
திரயோதசி. தொழிற்கூடங்கள், வியாபார நிலையங்கள், இல்லங்கள் அனைத்தும்
அன்றைய தினம் அலங்கரிக்கப்பட்டு விளங்குகின்றன. அல்பனா, ரங்கோலி முதலியவை
வரையப்பட்டு, அன்னையின் நல்வரவைக் குறிக்கும் வகையில் ஸ்ரீபாதங்கள்
எழுதப்பட்டு விளங்குகின்றன. மாலையில் தீபங்கள் ஏற்றப்பட்டு, அன்னையின்
திருவருளை வேண்டி பூஜைகள் செய்யப்படுகின்றன...
தன திரயோதசி அன்று வாங்கும் பொருட்கள் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.
எனவே, தங்கம், வெள்ளி துவங்கி, எவர்சில்வர், இரும்பு வீட்டு
உபயோகப்பொருட்கள் வரை வாங்குகிறார்கள். முதலீடுகள் செய்வதும் மிக நல்லது
என்பதால், சிறிய அளவிலேனும், பங்குகள், வியாபாரங்கள், டெபாசிட்களில்
முதலீடுகள் செய்கிறார்கள்..
தன திரயோதசி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்.
1.வெள்ளியினால் ஆன லக்ஷ்மி தேவி, பிள்ளையார் உருவங்கள் வாங்குவது வீடுகளிலும் தொழிலகங்களிலும் வெற்றி, விருத்தி முதலியவை அளிக்கும்.
2.வெள்ளி நாணயங்கள், பித்தளை பூஜைப் பொருட்கள், மரத்தாலான கடவுளர்
உருவங்கள் வாங்குவது வளம் பெருக்கும். இவற்றை அன்பளிப்பாகப் பிறருக்குத்
தருவது விசேஷம்.
3. எவர்சில்வர், இரும்பு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது,
சனீஸ்வரபகவானின் அதிதேவதையான எமதர்மராஜரை திருப்திப்படுத்தும். நீண்ட ஆயுளை
நல்கும்.
4. சமையலறையில் உபயோகிக்கும் பாத்திரங்கள் . தன்வந்திரி பகவான், தன்
கையில் அமுதம் நிரம்பிய கலசப் பாத்திரத்துடன் தோன்றியதால், பாத்திரங்கள்
வாங்குவதை அதிர்ஷ்டமாக நினைக்கிறார்கள்.
5.தானிய விதைகள். இவற்றை உழவு நிலங்களில் தூவுகிறார்கள். இது தானிய விருத்தியையும் நீர் வளத்தையும் பெருக்கும்.
6. கண்/காது சொட்டு மருந்துகள், பிற மருந்துகள். இவற்றை வாங்கி, கட்டாயம்
எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். இது நோயற்ற வாழ்வை நல்கும்.
7. புது கணக்குப் புத்தகங்கள் வாங்குகிறார்கள். அதில் தீபாவளி தினத்தன்று
லக்ஷ்மி குபேர பூஜை செய்து,புதுக்கணக்கு எழுதத் துவங்குகிறார்கள்.
கூர்மையான முனையுடைய கத்தி, கத்தரிக்கோல் இன்ன பிற பொருட்கள் வாங்குவதைக் கட்டாயம் தவிர்க்கிறார்கள்.
தன திரயோதசி தினத்தன்று பாற்கடலில் இருந்து அபூர்வப் பொருட்களுடன் திருமகள்
வெளிவந்ததாகக் கருதி, லக்ஷ்மீ தேவியைப் பூஜிக்கிறார்கள். மேலும், அன்றைய
தினம் பெண்குழந்தை பிறந்தால், லக்ஷ்மீ தேவியே பிறந்ததாகக் கருதி,
அதிர்ஷ்டக் குழந்தை என்று போற்றுகிறார்கள். அந்தப் பெண், திருமணமாகி, கணவன்
வீடு செல்லும் போது, ஒரு தட்டில் குங்குமத்தை நிரப்பி, அதில், அவளது
பாதச்சுவடுகளைப் பதிக்கச் சொல்லி வாங்குகிறார்கள். இதனால், இல்லத்தில்
என்றென்றும் லக்ஷ்மீ தேவி நீங்காது நிலைத்திருப்பாள் என்று
நம்புகிறார்கள்..
தன திரயோதசி தினம் குறித்த கதைகள் பெரும்பாலும் அனைவரும் அறிந்தவையே.. அவற்றைச் சுருக்கமாகத் தருகிறேன்.
தேவர்களும், அசுரர்களும், பாற்கடலைக் கடைந்த போது, தன்வந்திரி பகவான்
அமுதம் நிரம்பிய கலசத்துடன் தோன்றிய தினம் தன திரயோதசி.. ஆகவே அன்றைய தினம்
தன்வந்திரி பகவானுக்கும் பூஜைகள் செய்கிறார்கள்.
ஹிமா என்ற அரசனின் 16 வயது மகன், திருமணமான நான்காம் நாள் இரவு பாம்பு
கடித்து இறப்பான் என்று அவன் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள் சொல்ல, அவன்
இளம் மனைவி, அந்த நாளில், வீடெங்கும் தீபமேற்றி, நடுவில் ஒரு குவியலாக, தன்
ஆபரணங்களை வைத்து, தன் கணவனைத் தூங்க விடாது, பாடல்களைப் பாடியும்,
புராணக் கதைகளைச் சொல்லியும் பார்த்துக் கொண்டாள். பாம்பு உருவில் வந்த
யமதர்மராஜா, தீபங்கள் மற்றும் ஆபரணங்களின் பிரகாசம் கண்களை கூசச் செய்யவே,
விடியும் வரை காத்திருந்து பின் திரும்பி விட்டாராம். இவ்வாறு அந்தப் பெண்,
தன் கணவனைக் காத்தாளாம். ஆகவே, யம பயம் நீங்க, யமதீபம் ஏற்றப்படுகின்றது.
இதே கதை சிறு மாற்றத்துடனும் சொல்லப்படுகின்றது.
ஹிமாவின் மகனின் உயிரைப் பறிப்பதற்காக, யமதூதன் வந்த போது, அவன் இளம் மனைவி
அழுது, தன் கணவன் உயிரைக் காக்க ஒரு உபாயம் சொல்லுமாறு வேண்டியதாகவும்,
உடனே யமதூதன் அவள் மீது இரக்கம் கொண்டு, யமதர்மராஜரை அணுகிக் கேட்க, அதற்கு
தர்மராஜர், கார்த்திகை கிருஷ்ண பக்ஷ திரயோதசியில், தெற்கு நோக்கி தீபங்கள்
ஏற்றி வைத்து வழிபடுவோரை, அகால மரணத்திலிருந்து தாம் காப்பதாகக் கூறினார்.
யமதூதனும் இதை இளவரசியிடம் உரைத்தார். அவ்வாறே அவளும் தென் திசை நோக்கி தீபங்கள் ஏற்றி, தொழுது வணங்கி, தன் கணவனைக் காத்தாள்.
தன திரயோதசி குறித்த மற்றொரு கதை:
'தந்தெரஸ்' என்ற சொல்லுக்கு, செல்வத்தை மழை போல் வர்ஷிக்கும் தினம் எனவும்
பொருள் சொல்லப்படுகிறது. திருமளை அன்றைய தினம் வழிபாடு செய்ய வேண்டியதன்
காரணத்தைச் சொல்லும் ஒரு கர்ணபரம்பரைக் கதை..
இது மனதால் ஒன்றுபட்ட திவ்ய தம்பதிகள் நடத்தும் லீலைகளுள் ஒன்று..
திவ்ய தம்பதிகள் நடத்தும் லீலைகள் எல்லாம் மானிடர்களாகிய நமக்கு நல்வழி புகட்ட அல்லவா?!!.
ஸ்ரீமஹாவிஷ்ணு ஒரு முறை லோக சஞ்சாரம் செய்யப் புறப்பட்டார். அப்போது,
ஸ்ரீலக்ஷ்மீ தேவி, தானும் உடன் வர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டாள்.
அன்னையின் வேண்டுகோளைக் கேட்ட திருமால், இரண்டு நிபந்தனைகளுக்குக்
கட்டுப்பட்டால் தன்னுடன் வர இயலும் என்று கூறினார். ஒன்று, தேவி உலகாயத
விருப்பங்களுக்கு ஆட்படக்கூடாது. இரண்டு, தென் திசை நோக்கி தன் பார்வையை
செலுத்தக் கூடாது.
அன்னை இந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு, உடன் வர ஒப்புக் கொண்டாள்.
ஆனால் அன்னையால் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற இயலவில்லை. லோக சஞ்சாரம்
செய்யும் வேளையில், தற்செயலாக, தன் பார்வையை தென் திசை நோக்கி செலுத்திய
தேவி, அங்கு அழகு கொஞ்சும் மஞ்சள் வண்ண மலர்கள் மலர்ந்திருந்த தோட்டத்தைக்
கண்டாள். மலர்களின் அழகில் மயங்கி, அவற்றைப் பறித்துச் சூடிக் கொண்டு,
வயல்வெளிகளில் நடனமிடத் துவங்கினாள். அருகிருந்த கரும்புத் தோட்டத்தின்
கருப்பஞ்சாறையும் அன்னை ருசிக்கத் துவங்கினாள்.
தன் நிபந்தனைகளை தேவி மீறிவிட்டதைக் கண்டு, ஸ்ரீமஹாவிஷ்ணு கோபம் கொண்டார்.
தேவியிடம்,' இந்த மலர்ச்செடிகளுக்கும் கரும்புகளுக்கும் உரிமையாளனான
விவசாயியிடம், நீ பன்னிரண்டு ஆண்டுகள் சாதாரண கூலியாளாக இருந்து வேலை செய்ய
வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின், என்னை வந்து அடைவாய்' என்று
கூறிவிட்டு வைகுண்டம் ஏகினார்.
தேவி லக்ஷ்மி, தான், நிபந்தனைகளை மீறி, லோகாயத விருப்பங்களுக்கு ஆட்பட்டதை
எண்ணி வருந்தினாள். இருப்பினும், தன் மணாளனின் கட்டளைப்படி, அந்த
விவசாயியிடம் கூலியாளாகப் பணியாற்றலானாள்.
அன்னையின் வரவால், விவசாயி, மிக அதிக அளவிலான விளைச்சலை அடைந்தான்.
பன்மடங்கு லாபத்தின் காரணமாக, வாழ்வில் அபரிமிதமான முன்னேற்றத்தை அடைந்தான்
அவன்.
பன்னிரண்டு ஆண்டுகள் விரைவாகச் சென்றன. பன்னிரண்டாம் ஆண்டு முடிவில், தேவி,
விவசாயியிடம் சென்று, தான் விடைபெற்றுக் கொள்வதாகக் கூறினாள். ஆனால் அவனோ,
ஒரு நல்ல கூலியாளை அனுப்பத் தயாராக இல்லை. தான் அதிக அளவு சம்பளம்
தருவதாகக் கூறினான். தேவி மறுக்க, அவன் மீண்டும் மீண்டும் சம்பளத்தை
அதிகரித்து, வற்புறுத்தலானான்.
இறுதியில் தேவி ஒரு வேண்டுகோள் வைத்தாள். விவசாயியை கங்கைக்குச் சென்று
நீராடி வருமாறும், அச்சமயம், தான் தரும் சங்குகளை கங்கை ஆற்றுக்குச் சென்று
சேர்ப்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாள். விவசாயி திரும்ப வரும்
வரை, தான் அங்கேயே தங்கி இருப்பதாகவும் வாக்களித்தாள். நான்கு சிறிய
சங்குகளையும் விவசாயியிடம் தந்தாள்.
விவசாயி, சங்குகளோடு புறப்பட்டான். கங்கைக் கரையை அடைந்து, சங்குகளை நீரில்
சேர்க்கும் சமயம், நான்கு கரங்கள் நதியில் இருந்து, விரைந்து வந்து
அவற்றைப் பெற்றுக் கொண்டன.
விவசாயி, சங்குகளை தன்னிடம் அளித்தவர் சாதாரண மானிடப் பெண் இல்லை என்பதை
உணர்ந்தான். அவர் யாரென தனக்குக் காட்டுமாறு, கங்கா மாதாவிடம்
பிரார்த்தித்தான்.
கங்கா தேவியின் பெருங்கருணையால், வந்திருப்பது திருமகளே என உணர்ந்து,
விரைந்து இல்லம் சேர்ந்தான். திருமகளை, தன் இல்லம் விட்டுப் போக வேண்டாம்
என மன்றாடிக் கேட்டுக் கொண்டான்.
அன்னை, விவசாயியிடம், தான் அங்கேயே இருக்க இயலாதென்பதைக் கூறி, தான்
ஒவ்வொரு வருடமும் தனதிரயோதசி தினத்தன்று அவன் இல்லம் வருவதாகவும்,
அச்சமயம், இல்லத்தைத் தூய்மைப்படுத்தி, வாசற்படியில் அகல் தீபங்களை
ஏற்றினால், என்றென்றும் அவன் இல்லத்தை சுபிட்சமாக வைத்திருப்பதாகவும்
வாக்களித்தாள்.
அன்று முதல், தன திரயோதசி தினத்தன்று, இல்லங்களைத் தூய்மை செய்து, அகல்
தீபங்களை ஏற்றி ஸ்ரீலக்ஷ்மி தேவியை வழிபடும் வழக்கம் உண்டானது.
தன திரயோதசி எளிய முறை பூஜை விதிகள்
1. இல்லத்தை சுத்தமாக வைக்கவும். கோலங்கல் முதலியவற்றால் அலங்கரிக்கவும்.
2. பூஜை செய்யும் இடத்தில், ஒரு சுத்தமான துணியை விரித்து, அதில் அரிசியைப் பரப்பி வைக்கவும்.
3. ஒரு தாமிர/பித்தளை செம்பில், முக்கால் பாகம் நீர் நிரப்பி, பாக்கு, மலர்கள், ஒரு நாணயம், சிறிதளவு அரிசி இவற்றை இடவும்.
4. செம்பில், மாவிலைக் கொத்தை வைத்து, அதன் மேல் ஒரு சுத்தமான தட்டை
வைக்கவும். தட்டின் மேல் மஞ்சள் பொடி கொண்டு, தாமரை மலரை வரைந்து, அதன்
மேல் ஒரு சிறிய லக்ஷ்மி தேவி விக்ரகம் அல்லது படம் வைக்க வேண்டும்.
கலசத்தின் அருகில் சிறு விநாயகர் விக்ரகம் வைக்கவும். பிற தெய்வத்
திருவுருவங்களையும் வைக்கலாம்.
5.திருவிளக்கை ஏற்றிக் கொள்ளவும்.
6. மனதில் லக்ஷ்மி தேவியின் திருவுருவை ஆழ்ந்து தியானிக்கவும்..
7.கலசத்திற்கு, குங்குமத்தாலோ, மலர்களாலோ அர்ச்சனை செய்து, தூப தீபம் காட்டவும்.
8. இயன்றால் லக்ஷ்மீ தேவியின் விக்ரகத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.
ஷோடசோபசார பூஜையும் செய்யலாம். தேவியின் திருவுருவிற்கு, மணி பிளான்ட்டின்
இலைகள், சந்தன உருண்டைகள் இவற்றால் ஆன மாலைகள் சாற்றுவது சிறப்பாகக்
கருதப்படுகிறது.
9. இனிப்புகள், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு முதலியவற்றை
சமர்ப்பிக்கவும். குறைந்தது, ஐந்து வகை இனிப்புகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
அமைதியாக, ஆரத்தி காண்பிக்கவும். க்ஷமா பிரார்த்தனை நிறைவுற்ற பின், சிறிது நேரம் லக்ஷ்மீ தேவியைத் தியானிக்கவும்.
பிரசாதங்களை சிறிதளவு உண்டுவிட்டு, பின் விநியோகிக்கவும்.
மேற்கண்ட விதிகளில், அவரவர் சௌகரியப்படி பின்பற்ற முடிந்ததைப்
பின்பற்றலாம். இருப்பிடத்தைச் சுத்தமாக வைப்பது மட்டும் முக்கியம். பூஜை
செய்ய இயலாதவர்கள், அன்னையை மௌனமாக தியானிக்கலாம்..
சிலரது இல்லங்களில், குபேரனுக்கும் தனதிரயோதசி அன்று பூஜை
செய்யப்படுகின்றது. பதிமூன்று தீபங்கள் ஏற்றி, தூப தீப ஆராதனைகளுடன், குபேர
அஷ்டோத்திரம் சொல்லி வழிபாடு செய்யப்படுகின்றது.
யம தீபம் பூஜிக்கும் முறை:
1. மாவினால் ஆன தீபம் ஒன்று செய்து கொள்கிறார்கள். தீபத்தில் நான்கு திரிகள் போட்டு, நெய் அல்லது எண்ணை ஊற்றுகிறார்கள்..
2. இதுவே யம தீபம். யமதர்மராஜரின் திருப்திக்காகவும், முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காகவும் இதை ஏற்றி வழிபாடு செய்கிறார்கள்.
3. பெரும்பாலும் பூஜையை குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்தே செய்கிறார்கள்.
பூஜைக்கு அமர்பவர்கள் அனைவருக்கும், குடும்பத்தில் மூத்த பெண்மணி அல்லது
மணமாகாத கன்னிப் பெண், நெற்றியில் திலகமிட்டு அக்ஷதை போடுகிறார்.
4. திருவிளக்கையும் யமதீபத்தையும் ஏற்றுகிறார்கள்.
5. யமதீபத்தைச் சுற்றிலும் புனித நீர் தெளித்து, அக்ஷதை, மலர்கள், காசுகள் கொண்டு பூஜை செய்கிறார்கள்.
6. நான்கு திரிகளுக்காக, நான்கு வித இனிப்புகள் படைக்கிறார்கள். வேறு நிவேதனங்களும் செய்கிறார்கள்.
7.பெண்கள், யம தீபத்தை நான்கு முறை சுற்றி வந்து வணங்குகிறார்கள்.
8.குடும்பத்தின் மூத்த ஆண், தன் தலை மீது சுத்தமான துணியை அணிந்து கொண்டு,
யம தீபத்தை எடுத்துச் சென்று, தலைவாயிலின் வலப்புறத்தில் வைக்கிறார்.
இதன் பிறகு, மூத்தவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுகின்றனர்.
இவ்வாறு செய்வதால், யமதர்மராஜரின் ஆசியும், முன்னோர்கள் ஆசியும்,
கிடைக்கும். நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்வும் பெறலாம் என்பது நம்பிக்கை.
தன திரயோதசி தினத்தில், நம் இல்லங்களிலும் இயன்ற அளவு திருமகளைப் பூஜித்து, எல்லா வளங்களும் நலங்களும் பெற்று,
வெற்றி பெறுவோம்!!!
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."
is like an unsharpened pencil
- it has no point."
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪