Thursday, 12 November 2015

ஸ்ரீ கந்தர் கவசங்கள் ஆறு - தேவராய சுவாமிகள்



ஸ்ரீ கந்தர் கவசங்கள் ஆறு - தேவராய சுவாமிகள்

காப்பு: 

குறள் வெண்பா
அமரர் இடர்தீர அமரம் புரிந்த 
குமரன் அடி நெஞ்சே குறி. 

நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம் நெஞ்சிற் 
பதிப்போர்க்குக் செல்வம் பலித்து கதித்து ஓங்கும் 
நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் 
சஷ்டி கவசந் தனை. 



திருப்பரங்குன்றம் - தெய்வானை மணாளன்    *

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே 
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா 
குறுக்குத்துறையுறை குமரனே அரனே 
இருக்கும் குருபரா ஏரகப்பொருளே 
வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே 
ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ 
ஐயா குமரா அருளே நமோ நமோ 
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ 
பழநியங்கிரிவாழ் பகவா நமோ நமோ 
மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ 
விராலிமலையுறை விமலா நமோ நமோ 
மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ 
சூரசங் காரா துரையே நமோ நமோ 
வீரவேலேந்தும் வேளே நமோ நமோ 
பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ 
கண்களீராறுடை கந்தா நமோ நமோ 
கோழிக்கொடியுடைக் கோவே நமோ நமோ 
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ 
சசச சசச ஓம் ரீம் 
ரரர ரரர ரீம்ரீம் 
வவவ வவவ ஆம் ஹோம் 
ணணண ணணண வாம்ஹோம் 
பபப பபப சாம் சூம் 
வவவ வவவ கெளம் ஓம் 
லல லிலி லுலு நாட்டிய அட்சரம் 
கக கக கக கந்தனே வருக 
இக இக இக ஈசனே வருக 
தக தக தக சற்குரு வருக 
பக பக பக பரந்தாமா வருக 
வருக வருகவென் வள்ளலே வருக 
வருக வருக நிஷ்களங்கனே வருக 
தாயென நின்னிருதாள் பணிந்தேன் எனைச் 
சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே 
அல்லும் பகலும் அனுதினமும் என்னை 
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை 
வல்லவிடங்கள் வாராமல் தடுத்து 
நல்ல மனத்துடன் ஞானகுரு உனை 
வணங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள் 
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும் 
கந்தா கடம்பா கார்த்தி கேயா 
நந்தன் மருகா நாரணி சேயே 
என்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை 
தண்ணளி அளிக்கும் சாமிநாதா 
சிவகிரி கயிலை திருப்பதி வேளூர் 
தவக்கதிர்காமம் சார்திரு வேரகம் 
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர் 
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல் 
தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு 
சன்னதி யாய்வளர் சரவண பவனே 
அகத்திய முனிவனுக்(கு) அன்புடன் தமிழைச் 
செகத்தொர் அறியச் செப்பிய கோவே 
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம் 
நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம் 
வித்தாய் நின்ற மெய்ப்பொருளோனே ! 
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே 
வெற்றிக் கொடியுடை வேளே போற்றி 
பக்திசெய் தேவர் பயனே போற்றி 
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி 
அத்தன் அரி அயன் அம்பிகை லட்சுமி 
வாணி யுடனே வரைமாக் கலைகளும் 
தானே நானென்று சண்முகமாகத் 
தாரணியுள்ளோர் சகலரும் போற்றப் 
பூரண கிருபை புரிபவா போற்றி 
பூதலத்துள்ள புண்ய தீர்த்தங்கள் 
ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில் 
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய் 
பண்ணும் நிஷ்டைகள் பலபல வெல்லாம் 
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம் 
எள்ளினுள் எண்ணெய் போலெழிலுடை உன்னை 
அல்லும் பகலும் ஆசாரத்துடன் 
சல்லாப மாய்உனைத் தானுறச் செய்தால் 
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி 
பல்லா யிரநூல் பகர்ந்தருள்வாயே 
செந்தில்நகர் உறை தெய்வானை வள்ளி 
சந்ததம் மகிழும் தயாபர குகனே ! 
சரணம் சரணம் சரஹணபவ ஓம் 
அரன்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம் 
சரணம் சரணம் சரஹணபவ ஓம் 
சரணம் சரணம் சண்முகா சரணம் 



திருச்செந்தூர்த் தேவசேனாபதி    *

சஷ்டியை நோக்கச் சரஹணபவனார் 
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்; 
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை 
கீதம் பாட கிண்கிணி யாட 
மைய நடஞ்செயும் மயில்வாகனனார் 
கையில் வேலால் எனைக்காக்கவென்று வந்து 
வரவர வேலாயுதனார் வருக 
வருக வருக மயிலோன் வருக 
இந்திரன் முதலா எண்டிசை போற்ற 
மந்திரவடிவேல் வருக வருக 
வாசவன் மருகா வருக வருக 
நேசக் குறமகள் நினைவோன் வருக ! 
ஆறுமுகம் படைத்த ஐயா வருக 
நீறிடும் வேலவன் நித்தம் வருக 
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக 
சரஹணபவனார் சடுதியில் வருக ! 
ரஹண பவச ரரரர ரரர 
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி 
விணபவ சரஹ வீரா நமோநம 
நிபவ சரஹண நிறநிற நிறென 
வசர ஹணப வருக வருக! 
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக 
என்னை ஆளும் இளையோன் கையில் 
பன்னிரண்டாயும் பாசாங் குசமும் ! 
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க 
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக 
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் 
உய்யொளி செளவும், உயிரையுங் கிலியும் 
கிலியுங் செளவும் கிளரொளியையும் 
நிலை பெற்றென்முன் நித்தமும் ஒளிரும் 
சண்முகன் றீ£யும் தனியொளி யொவ்வும் 
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக 
ஆறு முகமும் அணிமுடி ஆறும் 
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் 
பண்ணிரு கண்ணும் பவளச் செவ்வாயும் 
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் 
ஈராறு செவியில் இலகுகுண் டலமும் 
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் 
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து 
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் 
முப்புரி நூலும் முத்தணி மார்பும் 
செப்ப ழகுடைய திருவயி றுந்தியும் 
>
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் 
நவரத்னம் பதித்த நற் சீராவும் 
இருதொடை அழகும் இணைமுழந் தாளும் 
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க 
செககண செககண செககண செகண 
மொகமொக மொகமொக மொகமொக மொகென 
நகநக நகநக நகநக நகென 
டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண 
ரரரர ரரரர ரரரர ரரர 
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி 
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு 
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு 
விந்து விந்து மயிலோன் விந்து 
முந்து முந்து முருகவேள் முந்து 
என்றனை யாளும் ஏரகச் செல்வ ! 
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் 
லாலா லாலா லாலா வேசமும் 
லீலா லீலா லீலாவிநோத னென்று 
உன்றிருவடியை உறுதியென் றெண்ணும் 
என்றலை வைத்துன் இணையடி காக்க 
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க 
பன்னிரு விழியால் பாலனைக் காக்க 
அடியேன் வதனம் அழகுவேல் காக்க 
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க 
கதிர்வேல் இரண்டு கண்ணினைக்காக்க 
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க 
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க 
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க 
முப்பத் திருபல் முனைவேல் காக்க 
செப்பிய நாவை செவ்வேல் காக்க 
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க 
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க 
மார்பை இரத்தின வடிவேல் காக்க 
சேரிள முலைமார் திருவேல் காக்க 
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க 
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க 
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க 
பழுபதி னாறும் பருவேல் காக்க 
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க 
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க 
நாணாங்கயிற்றை நல்வேல் காக்க 
ஆண்குறியிரண்டும் அயில்வேல் காக்க 
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க 
வட்டக் குதத்தை வல்வேல் காக்க 
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க 
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க 
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க 
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க 
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க 
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க 
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக 
நாபிக் கமலம் நல்வேல் காக்க 
முப்பால் நாடியை முனைவேல் காக்க 
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க 
அடியேன் வசனம் அசைவுள நேரம் 
கடுகவே வந்து கனகவேல் காக்க 
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க 
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க 
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க 
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க 
காக்க காக்க கனகவேல் காக்க 
நோக்க நோக்க நொடியில் நோக்க 
தாக்க தாக்க தடையறத் தாக்க 
பார்க்க பார்க்க பாவம் பொடிபட 
பில்லி சூனியம் பெரும்பகை அகல 
வல்ல பூதம் வலாட்டிகப்பேய்கள் 
அல்லற்படுத்தும் அடங்காமுனியும் 
பிள்ளைகள் தின்னும் புழக்கடைமுனியும் 
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் 
பெண்களைத் தொடரும் பிரமராக் கருதரும் 
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட 
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் 
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் 
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் 
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் 
தண்டியக்காரரும் சண்டா ளர்களும் 
என் பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட 
ஆனை அடியினில் அரும்பா வைகளும் 
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் 
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் 
பாவைக ளுடனே பலகலசத்துடன் 
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் 
ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும் 
காசும் பணமும் காவுடன் சோறும் 
ஓதும்அஞ் சனமும் ஒருவழிப் போக்கும் 
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட 
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட 
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட 
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட 
வாய்விட் டலறி மதிகெட் டோட 
படியினில் முட்டப் பாசக் கயிற்றால் 
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு 
கட்டி உருட்டு கால்கை முறியக் 
கட்டு கட்டு கதறிடக் கட்டு 
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட 
செக்குசெக்கு செதில் செதிலாக 
சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு 
குத்து குத்து கூர்வடி வேலால் 
பற்றுபற்று பகலவன் தணலெரி 
தணலெரி தணலெரி தணலதுவாக 
விடுவிடு வேலை வெருண்டது ஓடப் 
புலியும் நரியும் புன்னரி நாயும் 
எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோடத் 
தேளும் பாம்பும் செய்யான் பூரான் 
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் 
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க 
ஒளுப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் 
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் 
சூலையங் சயங்குன்மம் சொக்குச் சிறங்கு 
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி 
பக்கப் பிளவை படர்தொடை வாழை 
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி 
பற்குத்து அரணை பருஅரை ஆப்பும் 
எல்லாப்பிணியும் என்றனைக் கண்டால் 
நில்லாதோட நீயெனக் கருள்வாய் 
ஈரேழ் உலகமும் எனக்குற வாக 
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா 
மண்ணாளரசரும் மகிழ்ந்துற வாகவும் 
உன்னைத் துதிக்க உன்திரு நாமம் 
சரஹணபவனே சைலொளி பவனே 
திரிபுர பவனே திகழொளி பவனே 
பரிபுர பவனே பவமொளி பவனே 
அரிதிரு மருகா அமாராபதியைக் 
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் 
கந்தா குகனே கதிர் வேலவனே 
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை 
இடும்பனை அழித்த இனியவேல் முருகா 
தணிகா சலனே சங்கரன் புதல்வா 
கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா 
பழநிப் பதிவாழ் பால குமாரா 
ஆவினன்குடிவாழ் அழகிய வேலா 
செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா 
சமராபுரிவாழ் சண்முகத் தரசே 
காரார் குழலாள் கலைமகள் நன்றாய் 
என் நாஇருக்க யானுனைப் பாட 
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் 
பாடினேன் ஆடினேன் பரவசமாக 
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை 
நேசமுடன் யான் நெற்றியில் அணியப் 
பாசவினைகள் பற்றது நீங்கி 
உன்பதம் பெறவே உன்னருளாக 
அன்புடன் இரக்ஷ¢ அன்னமுஞ் சொன்னமும் 
மெத்தமெத்தாக வேலா யுதனார் 
சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க 
வாழ்கவாழ்க மயிலோன் வாழ்க 
வாழ்கவாழ்க வடிவேல் வாழ்க 
வாழ்கவாழ்க மலைக்குரு வாழ்க 
வாழ்கவாழ்க மலைக்குற மகளுடன் 
வாழ்கவாழ்க வாரணத் துவஜம் 
வாழ்கவாழ்க என் வறுமைகள் நீங்க 
எத்தனைகுறைகள் எத்தனை பிழைகள் 
எத்தனை யடியேன் எத்தனை செயினும் 
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன் 
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே 
பிள்ளையென்றன்பாய்ப் பிரிய மளித்து 
மைந்தனென்மீதுன் மனமகிழ்ந் தருளி 
தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய் 
கந்தர் சஷ்டிகவசம் விரும்பிய 
பாலன் தேவராயன் பகர்ந்ததை 
காலையில் மாலையில் கருத்துடன் நாளும் 
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி 
நேசமுடனொரு நினைவதுமாகிக் 
கந்தர் சஷ்டிக்கவசமிதனைச் 
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் 
ஒருநாள் முப்பத்தாறுருக்கொண்டு 
ஓதியே செபித்து உகந்துநீ றணிய 
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் 
திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர் 
மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர் 
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் 
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் 
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் 
கந்தர் கைவேலாம் கவசத் தடியை 
வழியாய்க்காண மெய்யாய் விளங்கும் 
விழியாற்காண வெருண்டிடும் பேய்கள் 
பொல்லா தவரைப் பொடிபொடியாக்கும் 
நல்லோர் நினைவில் நடனம் புரியும் 
சர்வ சத்துரு சங்கா ரத்தடி 
அறிந்தெனதுள்ளம் அட்டலட்சு மிகளில் 
வீரலட்சுமிக்கு விருந்துணவாகச் 
சூரபத்மாவைத் துணித்தகை அதனால் 
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த 
குருபரன் பழநிக் குன்றிலி ருக்கும் 
சின்னக் குழந்தை சேவடி போற்றி 
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் 
மேவிய வடிவுறும் வேலவா போற்றி 
தேவர்கள் சேனா பதியே போற்றி 
குறமகள் மனமகிழ்கோவே போற்றி 
திறமிகு திவ்விய தேகா போற்றி 
இடும்பா யுதனே இடும்பா போற்றி 
கடம்பா போற்றி கந்தா போற்றி 
வெட்சி புனையும் வேளே போற்றி 
உயர்கிரி கனகசபைக்கோ ரரசே 
மயில் நடமிடுவோய் மலரடி சரணம் 
சரணம் சரணம் சரஹண பவஓம் 
சரணம் சரணம் சண்முகா சரணம் ! 



திருவாவினன்குடி தெண்டபாணி    *

திருவாவினன்குடி சிறக்கும் முருகா 
குருபரா குமரா குழந்தைவே லாயுதா 
சரவணை சண்முகா சதாசிவன் பாலா 
இரவலர் தயாபரா ஏழைபங் காளா 
பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா 
வரமெனக்(கு) அருள்வாய் வாமனன் மருகா 
இரண்டா யிரம் வெள்ளம் யோகம் படைத்தவா 
திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா 
இலட்சத்திருநான்கு நற்றம்பி மாருடன் 
பட்சத்துடனே பராசக்தி வேலதாய் 
வீர வாகு மிகுதள கர்த்தனாய் 
சூர சங்காரா துஷ்ட நிஷ்டூரா 
கயிலாய மேவும் கனக சிம்மாசனா 
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா 
>
அகத்திய மாமுனிக்(கு) அருந்தமிழ் உரைத்தவா 
சுகத்திரு முறுகாற் றுப்படை சொல்லிய 
நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக் 
கைக்கீழ் வைக்கும் கனமிசைக் குதவா 
திருவருணகிரி திருப்புகழ் பாட 
இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா 
ஆயிரத்தெட்டாம் அருள்சிவ தலத்தில் 
பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா 
எண்ணா யிரம் சமண் எதிர்கழு வேற்றி 
விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா 
குருவாம் பிரமனைக் கொடும்சிறை வைத்தே 
உருபொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன் 
கருதிமெய் யோகம்சொல்லியது ஒருமுகம் 
அருள்பெறு மயில்மீ(து) அமர்ந்த(து) ஒருமுகம் 
வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம் 
தெள்ளுநான்முகன் போல் சிருட்டிப்ப(து) ஒருமுகம் 
சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம் 
ஆரணம் ஓதும் அருமறை யடியார் 
தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம் 
ஞானமுதல்வருக்கு நற்பிள்ளை பழநி 
திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம 
பொருட் செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம 
ஏரகம் தனில்வாழ் இறைவா நமோநம 
கூரகம் ஆவினன்குடியாய் நமோநம 
சர்வ சங்கரிக்குத் தனயா நமோநம 
உறுசோலைமலைமேல் உகந்தாய் நமோநம 
எல்லாக்கிரிக்கும் இறைவா நமோ நம 
சல்லாப மாக சண்முகத்துடனே 
எல்லாத் தலமும் இனிதெழுந்தருளி 
உல்லாசத்துறும் ஓங்கார வடிவே 
மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை 
சாலமுக்கோணத் தந்தமுச் சக்தியை 
வேலாயுதமுடன் விளங்கும் குகனைச் 
சீலமார் வயலூர்ச் சேந்தனைத் தேவனை 
கைலாச மேருவாகாசத்தில் கண்டு 
பைலாம் பூமியும் பங்கய பார்வதி 
மேலும் பகலும் விண்ணுரு வேத்தி 
நாற்கோணத்தில் நளினமாய் அர்ச்சனை 
கங்கையீசன் கருதிய நீர்புரை 
செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை 
அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன் 
முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி 
வாய் அறுகோணம் மகேசுவரன் மகேசுவரி 
ஐயும் கருநெல்லி வெண்சாரைதன்மேல் 
ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன் 
பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை 
தந்திர அர்ச்சனை தலைமேல்கொண்டு 
மந்திர மூலத்தில் வாசியைக்கட்டி 
அக்கினி குதிரை ஆகாசத்தேவி 
மிக்கமாய்க் கருநெல்லிவெண்சாரை உண்பவர் 
பாகமாய் ரதமும் பகல்வழியாவர் 
சாகாவகையும் தன்னை அறிந்து 
ஐந்து ஜீவனுடன் ஐயஞ்சு கற்பமும் 
விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி 
சந்திர சூரியர் தம்முடன் அக்கினி 
அந்திரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச் 
சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை 
மந்திர அர்ச்சனை வாசிவ என்று 
தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில் 
ஆறுமுகமாய் அகத்துளே நின்று 
வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து 
யோசனை ஐங்கரன் உடன் விளையாடி 
மேலைக்கருநெல்லி வெண்சாரை உண்டு 
வாலைக்குழந்தை வடிவையும் காட்டி 
நரைதிரை மாற்றி நாலையும் காட்டி 
உரைசிவ யோகம் உபதேசம் செப்பி 
மனத்தில்பிரியா வங்கண மாக 
நினைத்தபடிஎன் நெஞ்சத்திருந்து 
அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி 
மதியருள் வேலும் மயிலுடன் வந்து 
நானே நீயெனும் லட்சணத் துடனே 
தேனே என்னுளம் சிவகிரி எனவே 
ஆறா தாரத்து ஆறு முகமும் 
மாறாதிருக்கும் வடிவையும் காட்டி 
கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்கத் 
தனதென வந்து தயவுடன் இரங்கிச் 
சங்கொடு சக்கரம் சண்முக தரிசனம் 
எங்கு நினைத்தாலும் என்முன் னே வந்து 
அஷ்டாவ தானம் அறிந்துடன் சொல்லத் 
தட்டாத வாக்கும் சர்வா பரணமும் 
இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத் 
துலக்கிய காவியம் சொற்பிரபந்தம் 
எழுத்துச் சொற்பொருள் யாப்பலங்காரம் 
வாழ்த்தும் என் நாவில்வந்தினி திருந்தே 
அமுத வாக்குடன் அடியார்க்கு வாக்கும் 
சமுசார சாரமும் தானே நிசமென 
வச்சிர சரீரம் மந்திர வசீகரம் 
அட்சரம் யாவும் அடியேனுக்குதவி 
வல்லமை யோகம் வசீகர சக்தி 
நல்ல உன் பாதமும் நாடியபொருளும் 
சகலகலை ஞானமும் தானெனக் கருளிச் 
செகதல வசீகரம் திருவருள் செய்து 
வந்த கலிபிணி வல்வினை மாற்றி 
இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக் 
கிட்டவேவந்து கிருபை பாலிக்க 
அட்டதுட் டமுடன் அனேக மூர்க்கமாய் 
துட்டதே வதையும் துட்டப் பிசாசும் 
வெட்டுண்ட பேயும் விரிசடை பூதமும் 
வேதாளம் கூளிவிடும்பில்லி வஞ்சனை 
பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுங்க 
பதைபதைத்தஞ்சிடப் பாசத்தால் கட்டி 
உதைத்து மிதித்(து) அங்கு உருட்டி நொறுக்கிச் 
சூலத்தாற் குத்தித் தூளுதூ ளுருவி 
வேலா யுதத்தால் வீசிப்பருகி 
மழுவிட்டேவி வடவாக்கினி போல் 
தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச் 
சிதம்பர சக்கரம் தேவி சக்கரம் 
மதம்பெறும் காளி வல்ல சக்கரம் 
மதியணி சம்பு சதாசிவ சக்கரம் 
பதிகர்ம வீரபத்திரன் சக்கரம் 
திருவைகுண்டம் திருமால் சக்கரம் 
அருள்பெருந் திகிரி அக்கினி சக்கரம் 
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால் 
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும் 
ஏக ரூபமாய் என்முன்னே நின்று 
வாகனத் துடன் என் மனத்தில் இருந்து 
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம் 
இம்பமா கருடணம் மேவும்உச் சாடனம் 
வம்பதாம் பேதான்ம் வலிதரு(ம்) மாரணம் 
உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடனம் 
தந்திர மந்திரம் தருமணி அட்சரம் 
உந்தன் விபூதி உடனே செபித்துக் 
கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க 
எந்தன் மனத்துள் ஏதுவேண் டியதும் 
தந்துரட் சித்தருள் தயாபரா சரணம் 
சந்தம் எனக்கருள் சண்முகா சரணம் 
சரணம் சரணம் சட்கோண இறைவா 
சரணம் சரணம் சத்துரு சங்காரா 
சரணம் சரணம் சரவணபவ ஓம் 
சரணம் சரணம் சண்முகா சரணம்