தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்
தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் இருளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் சுலபமாக விடுபடலாம் என போதித்தார். இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து யமதீபம் ஒன்றை ஏற்றிவைக்க வேண்டும். யமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து அகாலமரணம் சம்பவிக்காமல் காத்திடும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்று கூறினார். இப்படித்தான் தீபாவளி திருநாள் தோன்றியது. தீபாவளியன்று இரவில் லட்சுமி குபேர பூஜை செய்து, குபேர வாழ்வை பெறலாம். யமுனையின் சகோதரனான யமதர்ம ராஜாவை தீப ஒளிகளால் பூஜித்து நீண்ட ஆயுளைப் பெறலாம். இந்த பூஜையை சகோதரிகள் சகோதரனுக்காக இந்த பூஜையை செய்ய வேண்டும். அமாவாசை அன்று கேதார கவுரி விரதம் இருந்து அம்பிகையை வழிபட வேண்டும். தீபாவளி என்பது சாதாரண பண்டிகை அல்ல. ஏதோ நீராடி புத்தாடை உடுத்தி, பண்டங்களை உண்பது மட்டும் தீபாவளி அல்ல. அப்படி செய்யும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. கங்கா ஸ்நானத்தின் தத்துவம்: தீபாவளி திருநாளில் புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அதே முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால் நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணன் நரகாசுரனை அழித்த நாளே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள் என்று பெயர் பெற்றது. அன்று சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்திற்குமே கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின்படி அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால்தான் அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள். தீபாவளி குளியல்: தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும்; புண்ணியம் உண்டாகும். எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் அன்று ஒன்று சேர்வதால், அன்று எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப்பயன் கிட்டும்! தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் கங்கா ஸ்நானம் செய்த பின் புத்தாடை உடுத்தி, பல வகையான பலகாரங்கள் செய்து விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும் படைத்து பூஜிக்க வேண்டும். தீபாவளியன்று எண்ணெய்யை மனைவி தேய்த்துவிடுவது மிகவும் சிறப்பு என்று கருதப்படுகிறது. வெந்நீரில் குளிக்க வேண்டும். பலகாரம் படைப்பது ஏன்?: தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) படைக்கும் படையல் ஆகும். அன்று பிதுர்கள் வருவதாக ஐதீகம். நரகத்தில் இருப்பவர்கள் கூட அன்று விடுதலையாகி வீடுகளுக்கு வருவர் என்று புராணங்கள் கூறுகின்றன. இதனால்தான் நரக சதுர்த்தி என்று பெயர் ஏற்பட்டது. தீபாவளியன்று சூரிய உதயத்துக்கு நான்கு நாழிகைக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். நான்கு நாழிகை என்றால் 96 நிமிடம். அதாவது 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், அதிகாலை 4.20க்கு குளித்துவிட வேண்டும். பாசத் திருவிழா: வட மாநிலங்களில் தீபாவளியை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். முதல் நாள் லட்சுமி பூஜை, இரண்டாம் நாள் நரகசதுர்த்தி, மூன்றாம் நாள் முழுக்கு, ஐந்தாம் நாள் எமதர்ம வழிபாடு என கொண்டாடுகின்றனர். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். அவளுக்கு எமன் தீபாவளி அன்று பரிசுகளை வழங்கி மகிழ்வான். அன்று தங்கை அண்ணனுக்கு விருந்து கொடுப்பாள். இதைக் கொண்டாடும் வகையில் வட மாநிலங்களில் தங்கைகளுக்கு அண்ணன்மார் பரிசு வழங்கும் நாளாக தீபாவளி விளங்குகிறது. மூன்றாம் நாள் திருவிழாவில் இளம்பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் அமிழ்ந்து விடாமலும், அணைந்து விடாமலும் பார்த்துக் கொள்வார்கள். அப்போதுதான் இந்தாண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை. வித்தியாசமான தீபாவளி வழிபாடு: ராஜஸ்தானில் தீபாவளியன்று பெண்கள் உடல் முழுவதும் எனாமல் நகைகளை அணிந்து கொண்டு வண்ண ஆடைகள் அணிந்து நடனம் ஆடி மகிழ்வர். தீபாவளியன்று ராமரை வழிபடுவது ராஜபுத்திரர்களின் வழக்கம். மத்திய பிரதேசத்தில் குபேர பூஜை நடைபெறும். குபேரனை வழிபட்டால், பணத்தட்டுப்பாடு வராது என்பது அந்த மாநில மக்களின் நம்பிக்கை. வங்காளத்தில் காளிபூஜை நடைபெறும். தீபாவளியை இந்த மாநிலத்தில் மகா நிசா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். காளியின் உக்கிரத்தை சங்கரன் தணித்த நாளாக தீபாவளியை கொண்டாடுகின்றனர். இமாச்சலபிரதேசத்தில் பசுக்களை அலங்கரித்து வழிபடுவர். ஜைனர்கள் தீபாவளி நன்னாளை மகாவீரர் வீடு பேறு அடைந்த நாளாகத் கொண்டாடுகின்றனர். சீக்கியர்கள் சீக்கிய மதகுரு, குருநானக் பூத உடல் நீத்து புகழுடம்பு எய்திய நாளாக கொண்டாடுகின்றனர். சீனாவில் ஹீம்-ஹூபா மியான்மரில் தாங்கிஜீ, தாய்லாந்தில் லாய்கிரதோஸ் ஸ்வீடனில் லூசியா ஆகிய விழாக்கள் நமது நாட்டு தீபாவளியை போலவே விளக்குகளை வரிசையாக வைத்துக் கொண்டாடுகின்றனர். சர்வமத பண்டிகை: தீபாவளியை இந்து மதத்தினரும் மட்டும் கொண்டாடுவதில்லை, பவுத்த, ஜைன மதத்தினரும் கொண்டாடுகின்றனர். ஆசியாவிலேயே தீபாவளிதான் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகையாக திகழ்கிறது. ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை, திரயோதசி, சதுர்த்தசி, பிரதமை ஆகிய நான்கு நாட்களும் தீபாவளியோடு தொடர்பு கொண்டவையாகும். வடமாநிலங்களில் அமாவாசை, பிரதமையிலும் தென் மாநிலங்களில் திரயோதசி, சதுர்த்தசியிலும் தீபாவளி கொண்டாடுகின்றனர். தீபாவளிக்கு குபேர பூஜை: செல்வம் என்பது பணம், வீடு, வாசல், நகை என்பது மட்டுமல்ல. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் முன்னோர் சொல்லி வைத்திருக்கின்றனர். கோடிக்கணக்கில் கொட்டி வைத்திருக்கும் பணக்காரர்களில் பெரும்பகுதியினர் சாதாரண சர்க்கரை போட்டு டீ குடிக்கக்கூட முடியாதவர்களாக இருக்கின்றனர். செல்வம் குவிந்து கிடந்தாலும் சாப்பிடக்கூட வழியில்லை. இதே நிலைதான் ரோட்டில் திரியும் பிச்சைக்காரனுக்கும் இருக்கிறது. உழைக்க மனம் வராததால் ஒருவன் பிச்சை எடுக்கிறான். இந்த இரண்டும் இல்லாமல், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற தத்துவத்தை உணர்த்துவதே குபேர பூஜை. பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது குபேரன் உருவானான். லட்சுமி தேவியின் அருளைப் பெற்ற அவன், வற்றாத செல்வத்துக்குச் சொந்தக்காரன் ஆனான். இவனது எஜமான் ஸ்ரீமன் நாராயணன். திருப்பதி தலத்தில் சீனிவாசனாக அவதாரம் செய்து பத்மாவதியை திருமணம் செய்யும் வேளையில், எஜமானுக்கு ஒரு கோடியே 14 லட்சம் பொன் கடன் கொடுத்து பத்திரமும் எழுதி வாங்கிக்கொண்டவன் குபேரன். இந்தக் கடனுக்கு வட்டியாக திருப்பதி கோயிலில் குவியும் உண்டியல் பணத்தை பெற்றுக்கொண்டிருக்கிறான். குபேர பூஜையை என்று கொண்டாடுவது என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. சிலர் தீபாவளிக்கு முதல்நாளும், சிலர் தீபாவளி அன்றும், நடத்துகின்றனர். ஆனால், தீபாவளிக்கு மறுநாள் இந்த பூஜையை நடத்துவதே சிறந்தது. வளர்பிறையில் நல்ல காரியங்களைச் செய்வது வழக்கம். தீபாவளி அமாவாசை நாளில்தான் பெரும்பாலும் வருகிறது. எனவே, அதற்கு அடுத்த நாள் குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ விருத்திக்கு வழிவகுக்கும். குபேர பூஜையை ஒட்டி தங்க நகைகள் வாங்கலாம். திருமணங்கள் எல்லா மாதங்களிலும் (சூன்ய மாதங்கள் தவிர) நடந்தாலும் ஐப்பசியில் நடத்துவது விசேஷ அம்சம். ஐப்பசியிலிருந்து குளிர்காலம் துவங்குகிறது. இதிலிருந்து கார்த்திகை, மார்கழி, தை வரை கடும் குளிர் இருக்கும். இந்தக் குளிரால் உடலில் நோய்கள் ஏற்படும். ஐப்பசியில் திருமணம் முடிக்கும் தம்பதிகள் மணவாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பர். மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவனை எந்த நோயும் அண்டுவதில்லை. இதனால்தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றனர். அது மட்டுமல்ல! ஐப்பசியில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு மழலைச் செல்வமும் விரைவிலேயே கிடைத்துவிடும் என்பதும் பொதுவான நம்பிக்கை. பூஜை செய்யும் முறை: கோயில்களில் யாகம் செய்யும்போது ஒரு மந்திரம் ஒலிப்பதை பலரும் கேட்டிருக்கலாம். ராஜாதி ராஜாய பரஸ்கஞஸாஹினே, நமோ வயம்வை சரவணாய குரம்ஹே ஸமாகா மான்காம காமா யமக்யம் காமேஸ்வரோவை சரவணோததாது - குபேராய வைஸ்வரவணாய மஹாராஜாய நம என்பதே அந்த ஸ்லோகம். யாகம் ஒன்றை நடத்தும்போது குபேரனை அந்த இடத்திற்கு அழைக்கின்றனர். அந்தக்கோயில் கும்பாபிஷேகம் நடப்பதன் மூலம் ஊரே செழிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம், லட்சுமியுடன் கூடிய குபேரனின் படம் ஆகியவற்றை பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும். படத்தின் முன் வாழை இலை போட்டு, சாணப்பிள்ளையாரை வையுங்கள். இலையில் நெல்லை குவியலாக கொட்டுங்கள். வசதி உள்ளவர்கள் தங்க நகைகளை வைக்கலாம். வெற்றிலை, பாக்கு, பழம், பஞ்சாமிர்தம், இனிப்பு பதார்த்தங்கள் படையுங்கள். பின்னர் திருவிளக்கேற்றி பூஜை செய்யுங்கள். வடக்கு நோக்கி நின்று குபேரனை நினைத்து வழிபடுங்கள். எனக்கு கொடுத்த இந்த வாழ்விற்கு நன்றி. இது என்றும் நிலைத்திருக்க உன் அருள் வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள். வறுமையான நிலையில் இருப்பவர்கள், குபேரனே! எனது குடும்ப வறுமை நீங்கி போதுமான செல்வம் கிடைத்திட அருள் செய் என்று வேண்டுங்கள். பூஜைக்கு பிறகு, ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள். கோயிலுக்கு சென்று மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள். வற்றாத செல்வம் வீட்டில் தங்கும். லட்சுமி கடாட்சமாய் நம் வீடு என்றும் திகழ குபேர பூஜை வழிவகுத்துக் கொடுக்கும். குபேர பூஜையன்று எதுவுமே செய்ய வசதி இல்லாதவர்கள், பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும்; கோடி புண்ணியம் தேடி வரும். பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜையை குபேர பூஜையாகக் கருத சாஸ்திரத்தில் இடமிருக்கிறது. செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம். சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வைத்திருக்க வேண்டும். வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும். இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள். |
தீபாவளியின் காரணனாக நரகாசுரன் சொல்லப்படுவது போல், வேறு சில காரணச் சம்பவங்களும் கூறப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போம்.
தீப ஆவளி என்றால், தீபங்களை வரிசை வரிசையாக ஏற்றுவது என்று பொருள்.
- மாவலிச் சக்கரவர்த்தி முடிசூடிய நாள் இது.
- குப்த அரசன் விக்கிரமதித்த சந்திரகுப்தன் அரியணை ஏறிய திருநாள்.
- சமண மதத்தினரின் வணக்கத்திற்க்குரிய வர்த்தமான மகாவீரர் பரிநிர்வாணம்- வீடு பேறு அடைந்த புனித தினம்.
- குரு கோவிந்தசிங், சீக்கியமத அமைப்பான “கல்சா”வைத் தோற்றுவித்த தினம்.
- ஆதிசங்கரர் ஞான பீடங்களை நிறுவியதும் இதே தினத்தில் தான்.
- சாவித்திரி, யமதர்மனோடு வாதிட்டு தன் கணவனின் உயிரை மீட்ட தினமும் இதுவே தான்.
- நசிகேதன் யமனுலகு சென்று, வரம் பெற்றுத் திரும்பியதும் அந்த நாளில் தான்.
- வடநாட்டில் சிலர் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்காக கோவர்த்தன பூஜை செய்யும் திருநாள் இது தான்.
- மத்தியப் பிரதேசத்தில் வாழும் “ரவுத்தாயார்” என்னும் பழங்குடி மக்கள் தங்களைக் கண்ணனின்ஆயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, தீபாவளியை நமது பொங்கல் திருநாள் போல உழவர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். புதிய தானியக் கதிர்களை அறுவடை செய்து, லட்சுமி பூஜை செய்கின்றனர்.
- மராட்டியர்கள் மாவலிக்கு பூஜை செய்கின்றனர்.
- வங்காளத்தில் காளி பூஜை நிகழ்கிறது. தீபாவளியன்று, மூதேவியை விரட்டி, ஸ்ரீ தேவியை வரவேற்கும் வைபவம் நிகழ்த்தப்படுகிறது.
- சிலர் லட்சுமி பூஜை, குபேர பூஜை செய்கின்றனர்.
- சில இடங்களில் புதுக்கணக்கு தொடங்கப்படுகின்றது.
- சிலர் தீபாவளிக்கு இராமயானத்தில் ஆதாரம் தேடுகின்றனர். இராமர், இராவணனை வீழ்த்திவிட்டு, சீதையை மீட்டு, அயோத்திக்கு வந்த தினமே தீபாவளி என்று கூறப்படுகின்றது.
ஒரு சமயம் சனகாதி முனிவர்கள், சனத் குமாரரிடம்,' ஏன் தீபாவளி தினத்தன்று பிற தேவதைகளை விடவும் ஸ்ரீலக்ஷ்மீ தேவிக்கே முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்கின்றோம்?' என்று கேட்க, சனத் குமாரரும், பின்வருமாறு கூறலானார்.
'ரிஷிகளே!! அசுர வேந்தன் மஹாபலி, அனைத்து தேவதைகளையும் தன் பலத்தால் வென்று சிறையில் வைத்திருந்தான். பகவான் ஸ்ரீவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மஹாபலியை வென்று அனைத்து தேவதைகளையும் விடுவித்தார். அவர்கள் அனைவரும் மனநிறைவுடன் பாற்கடலுக்குச் சென்றனர். அங்கு ஸ்ரீலக்ஷ்மீ தேவியைக் கண்டு பணிந்து வணங்கித் துதித்தனர். அவர்கள் அனைவரையும் ஸ்ரீலக்ஷ்மீ தேவி, புதிய ஆடைகள், அணிமணிகள் தந்து வரவேற்றார். அன்றைய தினம் தீபாவளி அமாவாசை. ஆகவே, அன்று ஸ்ரீலக்ஷ்மியைப் பணிந்து வணங்கினால், அவரோடு இருக்கும் அனைத்துத் தெய்வங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். மேலும், லக்ஷ்மீ கடாக்ஷம் பெற வேண்டுவோர் அன்று புது ஆடைகள் அணிந்து, ஸ்ரீலக்ஷ்மிக்கு பூஜை செய்ய வேண்டும்' என்றுரைத்தார்.
அப்போது சனகாதி முனிவர்கள், 'ரிஷியே, ஒரு சமயம், மஹாபலி,
ஸ்ரீலக்ஷ்மீ தேவியை, ஒரு வரத்தின் மூலம் வேறெங்கும் செல்லவொட்டாது தன்
இருப்பிடத்திலேயே இருக்குமாறு செய்திருந்தானல்லவா.. எப்போது தேவியை அவன்
விடுவித்தான்?' என்று கேட்க, சனத் குமாரர் பின்வருமாறு கூறலாயினார்.
'முனிவர்களே!!, மஹாபலி, முதலில் தேவர்களிடம் போர் செய்து தோல்வியே
அடைந்தான். அதன் காரணமாக, ஒரு கழுதையாக மாறி மறைந்து திரிந்தான். அவனை
தேவராஜனான இந்திரன் தேடி அலைந்து வரும் பொழுதில், மஹாபலியைக் கண்டுணர்ந்து
அவனைக் கொல்ல முனையும் போது, பிரம்ம தேவர் குறுக்கிட்டு, தடுத்தார். அவர்
சொற்படி, தேவேந்திரன் மஹாபலியைக் கொல்லாது விடுத்தார். அச்சமயம், பலியின்
உடலில் இருந்து ஒரு தேவி வெளிவந்தாள். அவள் தேவேந்திரன் சமீபம் வர, அவளைப்
பார்த்து, பிரமித்த இந்திரன், பலியிடம், 'இந்தப் பெண் யார், இவள் அசுரப்
பெண்ணா, தேவலோக மங்கையா?' என்று வினவினார்.
மஹாபலி, 'இந்திரா, சாக்ஷாத் ஸ்ரீலக்ஷ்மீ தேவியே இந்தப் பெண்' என்று
பதிலிறுக்க, தேவேந்திரன், மிகப் பணிவுடன், ஸ்ரீலக்ஷ்மீ தேவியை அணுகி,
'அம்மா, தாங்கள் அசுர வேந்தனை விட்டு நீங்கி, தேவர்களுக்கு அருள்புரிய
திருவுளம் கொண்டதன் காரணம் நான் அறியலாமா?' என்று கேட்டார்.
அதற்கு ஸ்ரீலக்ஷ்மீ தேவி, ' நான், உண்மை, தர்மம், தானம், தவம், பராக்ரமம் முதலியவை நிறைந்தவர்களிடத்தும் நன்னடத்தை உடையவர்கள், விடிகாலையில் எழுபவர்கள், பகலில் உறங்காதவர்கள், தேவையுள்ளவர்களுக்கு உதவுபவர்கள், தனித்து உண்ணாதவர்கள், குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் முதலில் உணவளிப்பவர்கள், மூத்தோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், அதிகம் கோபப்படாதவர்கள், எளியோரைத் துன்புறுத்தாதவர்கள் ஆகியோரிடத்திலேயே நிலையாக இருப்பேன். அசுரர்கள் எளியோரைத் துன்புறுத்தியும், தர்மத்திலிருந்து வழுவியும் நடந்தார்கள். அசுரவேந்தனான மஹாபலி, அவர்களைத் தட்டிக் கேட்கவில்லை. ஆகவே, அவர்களை விட்டு விலகி, தேவர்களுக்கு அருள்புரியலானேன்’ என்று அருளினாள்.
இந்திரன் மிக மகிழ்ந்து, தேவியைப் பலவாறு துதித்து, ஸ்வர்க்க லோகத்திற்கு எழுந்தருளுமாறு பிரார்த்தித்தான்’ இவ்வாறு கூறி முடித்தார் சனத்குமாரர்.
தீபாவளியன்று ஸ்ரீலக்ஷ்மியை வழிபடுவதன் உட்பொருள்: சுத்தம் நிரம்பிய இடத்தில் லக்ஷ்மி தேவி வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை. தீபாவளி தினத்திற்கு முன்னரே, வீட்டைச் சுத்தம் செய்து, அலங்காரம் செய்வது வழக்கம். மேலும் பூஜையின் போது, துடைப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். துடைப்பத்திற்கும் மஞ்சள் குங்குமம் இட்டு வழிபாடு செய்வது வழக்கம். தீபாவளி தினத்தன்று வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றோம். அஞ்ஞான இருளகலும் இடத்தில், மெய்ஞானப் பேரொளியாகிய லக்ஷ்மீ தேவி தோன்றுகின்றாள். நீரை அன்புக்குக் குறியீடாகச் சொல்வது வழக்கம். அன்பு வெள்ளம் என்றே குறிப்பிடுகின்றோம். லக்ஷ்மீ தேவி நீர் மேல் தாமரை மலரில் அமர்ந்தருளுவதாகவே புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஆக, அன்பு என்ற நீர் நிரம்பியிருக்கும் உள்ளத்தில் லக்ஷ்மீ தேவியாகிய தெய்வீக சக்தி அருளும். தாமரை மலர் பற்றற்ற தன்மையைக் குறிப்பது. உலகக் கடமைகளை பற்றில்லாது செய்து வர, அன்னையின் அருள் கிடைக்கும். அன்னையின் இரு கரங்களிலும் தாங்கியிருக்கும் தாமரை மலர்களும், அன்னை அணிந்திருக்கு அளவில்லாத ஆபரணங்களும், வாழ்வின் ஒளி பொருந்திய தன்மையையும், வாழ்வை மிக சந்தோஷமாக அணுக வேண்டிய முறையையும் உணர்த்தும் அதே நேரத்தில், வாழ்வை நிலையாக எண்ணாத பற்றற்ற தன்மையையும் உணர்த்துகின்றன. வீடெங்கும் நல்லொளி பரவும் நேரத்தில், நம் மனதிலும் தெய்வீகப் பேரொளி பரவ வேண்டியே ஸ்ரீலக்ஷ்மீயைப் பூஜிக்கின்றோம்.
வட இந்தியாவில், மாலை வேளையிலேயே லக்ஷ்மீ தேவியைப்
பூஜிக்கின்றார்கள். ஸ்ரீலக்ஷ்மீ பூஜையை, லக்ஷ்மீ குபேர பூஜையாகச் செய்வதும்
வழக்கில் இருக்கின்றது. ஸ்ரீலக்ஷ்மியை வரவேற்கும் முகமாக, வாசலில் இருந்து
பூஜை செய்யும் இடம் வரை, அரிசி மாவினால் தேவியின் திருப்பாதங்களைக் கோலமாக
இடுகின்றனர். பூஜை செய்யும் இடத்தில், பூர்ண கலசத்தில் அம்பிகையை ஆவாஹனம்
செய்து, அகல் விளக்கு ஏற்றி, நறுமண மிக்க மலர்கள், தூப தீபங்கள்,
பஞ்சாமிர்தம் முதலியவற்றால் அன்னையை வணங்குகின்றனர். பூஜையில் தாமரை
மலர்கள் பிரதான இடம் பெறுகின்றன. பூஜைப் பிரசாதமான இனிப்புகளை
விநியோகிப்பது கட்டாயம். பூஜையில் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு
உட்பொருள் உண்டு. எடுத்துக்காட்டாக, பஞ்சாமிர்தம்.
தேவிக்கு, பால், தயிர், நெய், வெல்லம், தேன் கலந்த பஞ்சாம்ருதத்தை
சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஒரு மாபெரும் தத்துவம் அடங்கி உள்ளது.
இறைவனை அடைய, பக்தி மார்க்கமே சிறந்தது. தூய்மையான இறை பக்தி நிலையை அடைய,
அமைதியான மனமே முதல் தேவை. பால் மன அமைதியைத் தரும்.
தயிர். இது பாலை, உறை உற்றி, அசையாமல் சில மணி நேரங்களுக்கு வைத்துப் பின்
கிடைப்பது. பால் பொறுமையாக, பல மணி நேரங்கள், தனக்கு நிகழும் வேதிவினைகளைச்
சகிப்பதாலேயே தயிர் கிடைக்கிறது. தயிர் நமக்கு உணர்த்துவது, பொறுமை,
சகிப்புத்தன்மை என்னும் மிக அரிய பெருங்குணங்கள்.
நெய் தயிரிலிருந்து, வெண்ணை எடுத்துப் பின் அதை உருக்குவதால் கிடைப்பது.
தன்னை வெப்பத்தால் உருக்கினாலும், அதற்காக கோபிக்காமல், வாசனையுள்ள திரவமாக
உருமாற்றம் அடைகிறது. அதனாலேயே, தீபங்களுக்கும், ஹோமத்திற்கும்
பயன்படுத்துகிறோம். நெய் நமக்கு உணர்த்துவது, மன்னிக்கும் தன்மை என்னும்
அரிய குணம்.
வெல்லம்: இது கரும்பு பல வித உருமாற்றம் அடைவதால் கிடைப்பது. தன்னையே
தியாகம் செய்து, மிக இனிமையான பொருளாக உருமாறி நமக்குக் கிடைக்கிறது.
தியாகம் என்னும் மிக உயரிய குணம், வெல்லம் நமக்கு உணர்த்துவது.
தேன்: தேனீ, மலர்கள் தோறும் பறந்து சென்று, துளித்துளியாகத் தேனைச்
சேகரித்து வைக்கிறது. அந்தத் தேனை நாம் தான் உபயோகிக்கிறோம். தனக்கென
வாழாது பிறர் நலம் நாடும், சுயநலமின்மையே, தேன் நமக்கு உணர்த்துவது.
அமைதி, பொறுமை,சகிப்புத்தன்மை, மன்னிக்கும் தன்மை, தியாக
மனப்பான்மை, சுயநலமின்மை இவை யாவும் நிறைந்தவனே, முழுமையான மனிதன். இந்நிலை
அடைந்தவருக்கே பக்தியும் இறையருளும் எளிதில் வசப்படும் இதுவே
மானிடப்பிறவியின் நோக்கம்.
மறைமுகமாக, இவ்வைந்து குணங்களும் நமக்கு அருள வேண்டி, பஞ்சாமிர்தத்தைச் சமர்ப்பிக்கிறோம்.
நம்முள் பொங்கும் நேர்மறை சக்திகளைத் தூண்டும் முகமாகவே பூஜை
முறைகள், விரதங்கள், விரதக் கதைகள் யாவும் இருப்பது கண்கூடு. இப்போது
தென்னிந்தியாவிலும் ஸ்ரீலக்ஷ்மீ பூஜை செய்யும் வழக்கம் பெருகி வருகிறது.
நம்பிக்கையுடன் செய்யும் இறைவழிபாடு, கட்டாயம் நல்லனவற்றை நம்மோடு சேர்க்கும்!!..
அன்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."
is like an unsharpened pencil
- it has no point."
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
No comments:
Post a Comment