Friday, 6 February 2015

சங்கட ஹர சதுர்த்தி - 07.02.2015

 சங்கட ஹர சதுர்த்தி
விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு."ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

வரலாறு

விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் நடனமாடும் போது அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.

அப்போது விநாயகர் சந்திரனிடம், "இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்" எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

விரதத்தின் பலன்கள்

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் உண்டாகும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும் என்றும் நம்பப்படுகிறது.

 

நம்முடன் விநாயகர்

விநாயகர் சதுர்த்தியான இன்று நீங்கள் விநாயகர் முன் அமர்ந்து சொல்ல வேண்டியது இதுவே. இந்த பிரார்த்தனையை சதுர்த்தியன்று மட்டுமின்றி, தினமும் காலையில் நீராடியவுடன் விநாயகர் முன் அமர்ந்து சொன்னால் எந்த தோஷமும் தொலைந்து போகும். உயர்ந்த புகழ் ஏற்படும். நல்ல குழந்தைகள் அமைவார்கள். எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும்.


*கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவா வரம் தர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாளகுணமுள்ளவனே! கஜாமுகாசுரனை வென்றவனே! கெட்டதை அழித்து நல்லதைச் செய்து என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம்.


*இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளி கொண்டவனே! பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தை தருபவனே! எல்லையில்லாத பரம்பொருளே! விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து அருளை வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.


*உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட குணமாகக் கொள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாகரனே! சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.


*திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து வை. தூய்மையான மனதைக் கொடு. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றி பெற துணை நிற்பவனே! கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை வைத்து வணங்குகிறேன். எம்பெருமானே! நீ வாழ்க, வாழ்க!


*பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை உடையவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் மைந்தனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! கஷ்டங்களை நீக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானை முக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து, வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகனே! சரணம்..சரணம்...சரணம்.


விநாயகர் விரதங்கள்:
வெள்ளிக்கிழமை விரதம்: வைகாசி வளர்பிறை வெள்ளிக்கிழமை துவங்கி, தொடர்ந்து 52 வெள்ளிக்கிழமைகளில் அனுஷ்டிக்கும் விரதம் (பெண்கள் வசதியில்லாத நாட்களை பின்வரும் வாரங்களில் கூட்டிக்கொள்ளலாம்). இந்த விரதத்தால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.


செவ்வாய்விரதம்: தை அல்லது ஆடி முதல் செவ்வாய் தொடங்கி, 52 வாரங்கள் அனுஷ்டிக்கும் விரதம் (பெண்கள் வசதியில்லாத நாட்களை பின்வரும் வாரங்களில் கூட்டிக்கொள்ளலாம்). இந்த விரதத்தால் செல்வ வளம் பெருகும்.


சதுர்த்தி விரதம்: ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் துவங்கி (இன்று), அடுத்த ஆண்டு புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி வரை தொடர்ந்து அனுஷ்டிப்பது. இந்த விரதத்தால் செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.


பிள்ளையார் நோன்பு (குமார சஷ்டி விரதம்):
கார்த்திகை தேய்பிறை பிரதமை திதி முதல், மார்கழி வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பது. இந்த விரதத்தால் தைரியம் அதிகரிக்கும்.


சங்கடஹரசதுர்த்தி: மாசி தேய்பிறை சதுர்த்தி துவங்கி, ஒரு ஆண்டு ஒவ்வொரு மாத தேய்பிறை சதுர்த்தியிலும் அனுஷ்டிப்பது. இந்த விரதத்தால் எப்படிப்பட்ட துன்பமும் விலகி விடும்.


தைவெள்ளி விரதம்: விநாயகரைக் குறித்து தை மாத வெள்ளிக்கிழமைகளில் செல்வ விருத்திக்காக பெண்கள் மட்டும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.


விநாயகர் நவராத்திரி: விநாயகர் சதுர்த்தியன்று துவங்கி தொடர்ந்து 9 நாள் இரவு 8 மணிக்கு திருவிளக்கு ஏற்றி, விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வணங்க வேண்டும். கன்னிப்பெண்களுக்கு சிறந்த வரன் அமைய ஏற்ற விரதம்.


விக்னம் களையும் விநாயகர்: எந்த செயலையும் நாம் செய்ய ஆரம்பிக்கும் முன் விநாயகரை வணங்கி அவருடைய அருளை வேண்டுகிறோம். கணபதியே ஓங்கார ஸ்வரூபி. அவர் விக்னங்களை அகற்றுபவர். குழந்தை முதல் முதியோர் வரை அவரை வணங்கி எல்லா இடையூறுகளையும் களைய பிரார்த்திக்கின்றனர். அவர் மோட்சத்திற்கு வழிவகுப்பவர். அவரை எந்த உருவத்திலும் வழிபடலாம். மஞ்சள் பொடியில் பிடித்து வைத்தாலும், களிமண்ணில் செய்தாலும், மரத்தில் செய்தாலும் அந்த உருவத்தில் பிரத்யட்சமாக நமக்கு அருள்பாலிப்பார்.


லலிதா ஸஹஸ்ர நாமத்தில் "மஹாகணேச நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா' என்ற நாமா வருகிறது. அதாவது, தேவி பண்டாசுரனை வதம் செய்யும்போது விநாயகர் பெரும் உதவி செய்தார் என்பது இதன் பொருள். தனது (விநாயக) யந்திரத்தினால் அசுரனும், அவனுடைய சகாக்களும் விடுத்த அத்தனை பாணங்களையும் வீழ்த்தி தேவியை வெற்றிபெறச் செய்தார். இதனால் தேவி மகிழ்ச்சி அடைந்தாள். விநாயகர் எப்போதும் தடைகளைப் போக்கி நம்மை காக்கிறார். வியாச முனிவர் சொல்ல அவர் மகாபாரதத்தை எழுதினார். தர்மத்தின் சாராம்சம் அனைத்தும் அடங்கியுள்ள இதிகாசம் மகாபாரதம். விநாயகரை, நாள்தோறும் வணங்கினாலும் பரீட்சை எழுதும் முன் கட்டாய மாகக் குழந்தைகள் அவரை பிரார்த்திக்க வேண்டும். வித்தையை அளிப்பவர் வித்யா கணபதி.

காதலை நிறைவேற்றிய கணபதி: விநாயகர் தன் தம்பி முருகப்பெருமானின் காதலை நிறைவேற்றி திருமணத்தை நடத்தி வைத்தவர். திருமாலின் கண்மலரில் தோன்றிய சுந்தரவல்லி சரவணப் பொய்கையில் நீராடி முருகனையே தன் கணவனாக அடைய வேண்டும் என்று தவம் செய்து வந்தாள். நீ வள்ளிமலையில் பிறந்து என்னை வந்து அடைவாய் என்று அருள்புரிந்தார் முருகன். வள்ளிமலையில் பிறந்து வளர்ந்த வள்ளி மீது முருகன் காதல் கொண்டு விளையாடல் புரிந்தார். வேடன், கிழவன் என பல வடிவத்தில் வந்து இறுதியில் தன் அண்ணன் விநாயகரை யானையாக வரும்படி அழைத்தார். விநாயகர் யானையாக வந்தார். யானையைக் கண்டு அஞ்சிய வள்ளிநாயகி முருகனைத் தஞ்சம் அடைந்தாள். முருகன் வள்ளியை மணந்து அருள்பாலித்தார். ""அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே'' என்று இந்நிகழ்வினை திருப்புகழில் தெளிவுபடுத்தி இருக்கிறார் அருணகிரிநாதர்.



குழந்தைகளின் கல்வி வளர...: குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முன்பு, விநாயகப்பெருமான் முன்னால் நின்று இந்த எளிய ஸ்லோகத்தை சொன்னால் விநாயகர் மிகச்சிறந்த கல்வி நலனைத் தருவார்.



""மூஷிக வாஹன மோதகஹஸ்த

சாமரகர்ண விளம்பித சூத்ர


வாமனரூப மஹேஸ்வர புத்ர


விக்ன விநாயக பாத நமஸ்தே!!''



இதை மிக எளிதாக மனப்பாடம் செய்து விடலாம்.


பொருள்: விநாயகப்பெருமானே! மூஞ்சூறை வாகனமாகக் கொண்டவரே! மோதகத்தை விரும்பி உண்பவரே! நீண்ட தும்பிக்கையை உடையவரே! அகன்ற காதுகளைக் கொண்டவரே! குள்ள வடிவமானவரே! சிவனின் மைந்தரே! தடைகளைத் தகர்ப்பவரே! உங்கள் திருப்பாதத்தை வணங்குகிறேன்.


அவ்வை பாடிய அகவல் : விநாயகருக்குரிய துதிப்பாடல்களில் விநாயகர் அகவல் மிகவும் பிரசித்தமானது. அவ்வையார் பாடிய இந்நூல் எழுந்த வரலாறு சுவையானது. அறிவின் வடிவாக விளங்கிய ஞான மூதாட்டி அவ்வையார். இவர் நாளும் விநாயகரை வழிபாடு செய்யும் இயல்புடையவர். ஒருநாள் சுந்தரர் யானை மீதும், சேரமான்பெருமாள் நாயனார் குதிரை மீது கயிலைக்குச் செல்வதை அறிந்தார். அவர்களுடன் தானும் கயிலை விரைவாகச் செல்ல எண்ணி வேகமாக விநாயகருக்கு பூஜை செய்தார். விநாயகர் அவ்வையார் முன் தோன்றி, "அமைதியாகப் பூஜை செய்வாயாக; அவர்களுக்கு முன்பாக கயிலைப்பதியை அடையச் செய்கிறேன்' என்று அருள்புரிந்தார். விநாயகரின் அருள்மொழி கேட்ட அவ்வையார் அவர் மீது பாடிய பாடலே விநாயகர் அகவல் என்பதாகும். உள்ளம் உருகி, கண்ணீர் பெருகி பரவசத்துடன் நின்ற அவ்வையாரை ஒரு நொடிப் பொழுதினில் தன் துதிக்கையால் கொண்டு சேர்த்தார். நாமும் விநாயகர் அகவல் பாடி ஐங்கரனின் அருள் பெறலாம்.


விநாயகருக்கு படைக்க வேண்டியவை
மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.


கரும்பு: இனித்தாலும் கடிப்பதற்கு கடினமானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது. அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


திருநீற்று தொட்டி விநாயகர் : மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் பொற்றாமரைக் குளத்தின் அருகே வீற்றிருக்கும் விபூதி விநாயகரை, திருநீற்றுப்பிள்ளையார் என்று அழைப்பர். மந்திரமாவது நீறு என்று திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருநீற்றின் பெருமையைப் பாடுகிறார். இவ்விநாயகருக்கு என்று அர்ச்சகர்கள் கிடையாது. பொற்றாமரைக்குளத்தில் கை, கால் தூய்மை செய்து, நாமே இவருக்கு நம் கையாலேயே திருநீற்றினை அபிஷேகம் செய்யலாம். தொட்டியில் வீற்றிருக்கும் இவ்விநாயகரின் மீது திருநீற்றினை இட்டு, அவரது பாதம் பணிந்து பூஜிப்பவர்களின் வினைகளைப் போக்கி அருள்கிறார்.


எலியின் மீது யானை: யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய பிராணியின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும் பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம். இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிற்றைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.

 நாம் வணங்கும் கடவுள்களிலேயே மிக செல்லமாக போற்றக் கூடியவர் விநாயகர்தான். வித்தியாசமான அவரது உருவத்தை பல்வேறு வடிவங்களில் உருவாக்கி, அவற்றை ஆன்லைனில் ஆராதனை செய்யவும், அனிமேஷன்களில் தவழவிட்டும் இன்டர்நெட்டில் அழகு பார்க்கின்றனர் ஏராளமான பக்தர்கள். இன்டர்நெட் வசதி உள்ளவர்கள், வீட்டிலிருந்த படியே இ-கணேஷை தரிசிக்க நல்ல வாய்ப்புள்ளது. யூ-டியூப் தளத்தில் விநாயகரின் கார்ட்டூன் கதைகள், வீடியோ பஜன்கள், தமிழ் துதிகள், விநாயகர் இதிகாசங்கள், வியாசரின் கதைகள், வேத மந்திரங்கள், விநாயகரின் பிறப்பு, சதுர்த்திக்கு உருவாகும் பொம்மை விநாயகர், குழந்தைகளுக்கான கதைகள், புதிர்கள், விநாயகர் துதி உள்ளிட்ட ஏராளமான வீடியோ தகவல்கள் இடம்பெற்றுள்ளன

 
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God




Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪


No comments:

Post a Comment