Monday, 17 December 2012

DAILY HOLY CHANTS







திருப்பள்ளியெழுச்சி # 2

திருச்சிற்றம்பலம்

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது; உதயம்நின் மலர்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர்மலர, மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன்; இமையோர்
திருப்பெருந்துறை சிவபெருமானே;
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே;
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே
.

பொருள்: திருப்பெருந்துறையிலே கோயில் கொண்டுள்ள சிவபெருமானே! அன்பர்களுக்கு அருட்செல்வத்தை அருளும் திருக்கயிலைக்கரசே! அலை கடல் போன்ற கருணை வள்ளலே!

கிழக்கே அருணோதயம் துவங்கி விட்டது இருள் அகன்று விட்டது; உன் திருமுகம் ஆன உதய கிரியில் உன் கருணையாகிய சூரியன் மேலே எழுந்தொறும் உன் கண்களாகிய மலர்கள் மலர்கின்றன.

அண்ணலாகிய தேனை நாடும் (அடியார்களாகிய) அறு கால வண்டுகளின் திரள்கள் முறையே தோத்திர முழக்கம் செய்கின்றன. எனவே எங்களுக்கு அருள பள்ளி எழுந்தருள்வாயாக எம்பெருமானே !.


திருப்பள்ளியெழுச்சி # 3


கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்கு
தேவ! நற் செறி கழற் றாளினை காட்டாய்;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய்;
எம்பெருமான்; பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: மஹா தேவா! மால் அயன் உட்பட யாராலும் முழுமையாக அறிய முடியாத அண்ணாமலையானே; உண்மையான் அடியவர்களாகிய எங்களுக்கு அறிந்து அனுபவிப்பதற்கு எளியவனே! திருப்பெருந்துறையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சிவபெருமானே!

அழகிய குயில்கள் மெல்லிய குரலில் பாடுகின்றன; கோழிகள் கூவுகின்றன; நீர்ப் பறவைகள் ஒலிக்கின்றன; சங்கம் முழங்குகின்றது. நட்சத்திரங்கள் ஒளி மங்கின, சூரிய ஒளி அதிகரிக்கின்றது. இவையெல்லாம் விடியலை உணர்த்துகின்றன.

எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக! திருவுள்ளத்தில் விருப்பம் கொண்டு அடியவர்களாகிய எங்களுக்கு வீரக் கழல் அணிந்த இரண்டு திருவடிகளையும் காட்டி அருள்வீர்களாக.



திருப்பள்ளியெழுச்சி # 4



இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே
!

பொருள்:அடிமையான என்னையும் ஆண்டு கொண்டு அருள் புரியும் திருப்பெருந்துறையில் கோவில் கொண்ட சிவபெருமானே!

உனது சந்நிதியில் வணங்கும் அடியவர்கள்தான் எத்தனை விதம். இனிமையான இசையை பொழிந்து கொண்டிருக்கும் வீணையையுடையவர்கள் ஒரு பக்கம்; யாழினை உடையவர்கள் ஒரு பக்கம்; வேத மந்திரங்களுடன், துதிப்பாடல்களையும் பாடிக்கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம்; நெருங்க தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் ஏந்தி உனது தரிசனத்திற்காக காத்து நிற்பவர் ஒரு பக்கம்; தலை வணங்கி தொழுபவர்களும், அன்பு மேலீட்டால் அழுபவர்களும், மெய் மறந்து துவள்பவர்களும் ஒரு பக்கம்; தலையின் மீது இரு கைகளையும் குவித்து அஞ்சலி செலுத்துவோர்கள் ஒரு பக்கம்.

இவ்வாறு அடியார்களை ஆட்கொண்ட வள்ளலே! ஒரு தகுதியும் இல்லாத அடியேனையும் ஆட்கொண்டு இனிய அருள் வழங்கும் எம்பெருமானே! பள்ளி எழந்தருள்க.




திருப்பள்ளியெழுச்சி # 5


"பூதங்கள் தோறுநின் றாய்" எனின் அல்லால்
"போக்கிலன் வரவிலன்" எனநினைப் புலவோர்
கீதங்கள்பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரி யாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்; பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அரசே! எண்ணத்திற்க்கும் எட்டாதவனே!

உன்னை ஞானியர்கள் நிலம், நீர், நெருப்பு,காற்று, வானம் என்னும் ஐந்து பூதங்களில் கலந்து நிற்கின்றாய் என்கின்றனர். உனக்கு தோற்றமுமில்லை, அழிவும் இல்லை என்று புலவர்கள் உன்னை புகழ்ந்து ஆடிப்பாடுகின்றனர். ஆனால் உன்னைக் நேராகக் கண்டு அறிந்தவர்களை நாங்கள் காதாலும் கேட்டு அறிந்திலோம்.

சிவபெருமானே! எங்கள் கண் முன்னே வந்து உனது திருக்காட்சியை வழங்கி எங்கள் குற்றங்களையெல்லாம் நீக்கி, எங்களை அடிமையாக ஏற்று அருள் செய்கின்ற எம்பெருமானே! பள்ளி எழுந்து அருள்வாயாக!


திருப்பள்ளியெழுச்சி # 6


பப்பற வீட்டிந் துணரும் நின் அடியார்
பந்தணை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப் பறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்ம்பெரு மான்; பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: மலையரசன் பொற்பாவை பார்வதி தேவியின் மணாளனே! செந்தாமரை மலர்கள் மலரும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே!

பரபரப்பை அறவே விட்டு அகக்கண்ணில் உன்னையே கண்டுணரும் மெய்ஞானியர் பலரும், இந்த மண்ணுலகிற்கு வந்து பாசக் கட்டுக்களை அறுத்த பலரும் கூட மானிட இயல்பினால் மாயையிலே அகப்பட்டு மை தீட்டிய கண்களை உடைய பெண்களாகிய நாயகி பாவம் கொண்டு உன்னைத் தலைவனாகக் கொண்டு வணங்குகின்றனர்.

இந்தப்பிறவிப் பிணியிலிருந்து எம்மை காத்து, முக்தியை தந்தருள, எம்மை ஆட்கொண்டு அருள் புரிய எம்பெருமானே! பள்ளி நீங்கி எழுந்தருள்வாயாக.


பந்த பாசத்தை விட்டு அந்த இறைவன் திருவடியில் சரணடைந்து மாயையிலிருந்து விடுபட அவன் அருளால் மட்டுமே முடியும் என்பதை உணர்த்தும் பாடல்.




திருப்பள்ளியெழுச்சி # 7


அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருவுரு, இவன்அவன் எனவே
எங்களை ஆண்டு கொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச
மங்கையுள்ளாய்; திருப்பெருந்துறை மன்னா!
எதுஎமைப் பணிகொளும் ஆறு? அது கேட்போம்;
எம்பெருமான்; பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: தேன் சொரியும் மலர்ச் சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோச மங்கை திருத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் சிவபெருமானே! திருப்பெருந்துறை அரசே!

பரம்பொருளாகிய பழச்சுவை போன்று தித்திப்பானதா? தேவாமிர்தம் போன்றதா? அறிய முடியாததா? எளிதானதா? என்று தேவர்களாலும் அறிய முடியாதது. ஆனால் " இதுவே அவனுடைய திருவுருவம், இவனே அந்த கருணைக்கடல் சிவ பெருமான்" என்று நாங்கள சுட்டிக் காட்டி சொல்லும்படி எளி வந்த கருணையினால் எங்களை அடிமையாக ஏற்றுக் கொண்டு இந்த மண்ணிலே எழுந்தருள்வாய்!

நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது? எம்பெருமானே! அந்த முறைமையை நீ எங்களுக்கு அருளினால் அவ்வாறே நாங்களும் ஒழுகுவோம்! எம்பெருமானே எங்களுக்கு அருள பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!



திருப்பள்ளியெழுச்சி # 8




முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்
பந்தணை விரலியும், நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெறுந்துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பொருள்: அனைத்திற்கும் முற்பட்ட முதலும், நடுவும், பிரளய காலத்திற்கு பின்னும் நிற்கும் முடிவும் ஆனவனே! அயன்,அரி,அரன் என்னும் மூவராலும் உன் தன்மையை அறிய முடியவில்லை என்றால் வேறு யாரால் தான் அறிய முடியும்?

இத்தகைய அருமையுடைய நீ, பந்து வந்து அணைகின்ற காந்தள் விரல்களையுடைய உமையம்மையுடன் நீவீரும் வந்து உன் அடியார்களாகிய எங்கள் பழமையான குடிசைகள் தோறும் எழுந்தருளியிருக்கிறாய்! பரம் பொருளே! எம்பெருமானே! கருணை வள்ளலே!

நெருப்பைப் போன்ற உன் சிவந்த திருமேனியைகாட்சியையும் தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த கோயிலையும் காட்டி, என் குரு மூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, என்னை ஆட்கொண்ட அமுதம் போன்றவனே! பள்ளி எழுந்தருள்க!

(எம்பெருமான் தானே வந்து மாணிக்கவாசகரை திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட எளிமையை இங்கே பாடுகின்றார் இப்பதிகத்தில்)




"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment